Politics

"இந்தியாவின் பெயரையே மாற்றவேண்டும்" -எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் அச்சத்தில் உளறும் பாஜக தலைவர்கள் !

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என அனைத்து கட்சித் தலைவர்களும் பேசியுள்ளனர்.

மேலும் ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தாக இருந்தது. இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆறு முக்கிய அடிப்படை செயல்திட்டங்களை உருவாக்குவது குறித்தும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமில்லாமல் அதை உரிய முறையில் தேர்தல் களத்தில் செயல்படுத்த பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டத்துக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்தியா என்ற பெயரை கேட்டாலே பாஜக தலைவர்கள் அலறி வருகின்றனர். முதன் முறையாக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா, தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள INDIA என்ற பயோவை 'பாரத்' என்று மாற்றி "ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம். இது 'பாரதம்'. மோடி பாரதத்திற்கான பிரதமர்" என்று கூறினார்.

அதன் பின்னர் மோடி தீவிரவாத இயக்கங்களின் பெயரில் கூட இந்தியா இருக்கிறது என பயத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் பன்சால் "இந்தியா என்பது பிரிட்டிஷ் காலனியாத்த ஆட்சியாளர்களால் வைக்கப்பட்ட பெயர். நாட்டின் உண்மையான பழமையான பெயர் பாரத் என்பதுதான். பாரத் என்ற பெயரை இந்தியா என பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மாற்றினார்கள். இந்தியா என்ற பெயர் அடிமைத்தனத்தின் குறியீடாக உள்ளது. அரசியலமைப்பில் இருந்தே அதை நீக்கம் செய்ய வேண்டும். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்யவேண்டும்"என்று கூறியுள்ளார். இதனைத் குறித்து பாஜக தலைவர்கள் ஏன் இந்தியா என்ற பெயருக்கு ஏன் இந்த அளவு அஞ்சிகிறார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: ”பா.ஜ.க நடத்துவது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சிமிகு பேச்சு!