Politics
வேலை செய்யாத Fastag.. ஆத்திரத்தில் TOLLGATE-ஐ அடித்து நொறுக்கிய தொண்டர்கள் - மகாராஷ்டிராவில் பரபரப்பு !
மகாராஷ்டிராவில் 'மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா' என்ற கட்சி செயல்பட்டு வருகிறது. இது சிவ சேனா கட்சியின் தலைவராக உத்தவ் தாக்கரே ஆகிய பிறகு, அவருக்கு எதிராக அவரது உறவினரான ராஜ் தாக்கரே என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த கட்சியின் தலைவராக ராஜ் தாக்கரே இருந்து வருகிறார். இந்த கட்சிக்கு என தொண்டர்கள் கூட்டமும் உள்ளது.
இந்த சூழலில் ராஜ் தாக்கரேவின் மகனான அமித் தாக்கரே மும்பையில் இருந்து தனது காரில் நாசிக் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த கார் சம்ருத்தி எக்ஸ்பிரஸ் சாலையில் சென்ற போது ஜுன்னார் டோல்கேட்டில் நிறுத்தப்பட்டது. அங்கே அமித் தாக்கரே காரில் இருந்த Fastag சரியாக வேலை செய்யவில்லை. இதனால் சுமார் 15 நிமிடங்கள் அமித்தின் கார் அங்கிருந்து வெளியேறாமல் நிறுத்தப்பட்டிருந்தது.
எனவே அவரது தொண்டர்கள், டோல்கேட் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அது சரி செய்யப்பட்டு அமித் அங்கிருந்து நாசிக்கிற்கு தனது காரில் சென்றார். இருப்பினும் அவரது தொண்டர்கள் அதிகாலையில் டோல்கேட்டிற்கு வந்து கட்டணம் வசூலிக்கும் கவுண்டர் உட்பட அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கூறுகையில், "அமித் தாக்கரே வந்த காரின் Fastag பிளாக் செய்துள்ளதாக ஊழியர்களுக்கு காட்டியுள்ளது. இருப்பினும் அது 3 நிமிடங்களிலே சரியாகியுள்ளது. பின்னர் இரவு சுமார் 10 மணிக்கு டோல்கேட்டுக்கு அமித் தாக்கரேவின் தொண்டர்கள் வந்தனர். ஊழியர்களை மன்னிப்பு கேட்க வற்புறுத்தியுள்ளனர்.
ஊழியர்களும் மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து அங்கிருந்து அந்த தொண்டர்கள் சென்று விட்டனர். ஆனால் அதிகாலை சுமார் 2 மணிக்கு திடீரென டோல்கேட்டுக்கு வந்த நவநிர்மாண் சேனா கட்சியை சேர்ந்த சில பேர், டோல்கேட்டை அடித்து உடைத்துவிட்டு சென்றுள்ளனர். உடைத்து யார் என்ன என்று விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் கைது செய்யப்படுவர்" என்றனர்.
இந்த நிகழ்வு குறித்து அமித் தாக்கரே கூறுகையில், "நான் ஜுன்னார் டோல்கேட்டில் நின்றபோது எனது காரில் Fastag இருந்தபோதும் கூட டோல்கேட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் தொண்டர்கள் ஊழியர்களிடம் கேட்டபோது, அங்கிருந்த மேனேஜர் உட்பட ஊழியர்கள் திமிராக பதில் அளித்தனர். மேலும் எனது காரை 15 நிமிடங்களாக நிறுத்தி வைத்தனர். பின்னர் பிரச்னைகள் சரியான பிறகு நான் அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்.
நான் ஹோட்டலுக்கு சென்ற பிறகுதான் யாரோ டோல்கேட்டை அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டது குறித்த செய்தி தெரியவந்தது." என்றார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!