Politics

“பெண்களை காப்பாற்ற முடியவில்லை.. ஆனால் ‘பாரத மாதாவுக்கு ஜே!’” - பாஜகவினரை வெளுத்து வாங்கிய கனிமொழி MP !

மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசு மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசைக் கண்டித்து, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு ஏற்பாட்டில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மகளிர் அணி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் திரளாக கலந்துகொண்டு மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் இதில் மிஸ்ஸிங் நரேந்திர மோடி, அழும் தேசம், 78 நாளாக வாய் திறக்காத பிரதமர் மோடி உள்ளிட்ட பாதகைகளை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின் மக்களுக்காக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் இரங்கல்களை வெளிப்படுத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, மகளிரணி தலைவர் விஜயா தாயன்பன், மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிரணி இணைச் செயலாளரும், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவருமான குமரி விஜயகுமார், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார், அமலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் கண்டன உரையாற்றிய கழக துணை பொது செயலாளர் கனிமொழி, "பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாட்டை வன்முறை பக்கம் தள்ளி கொண்டு இருக்கிறார்கள்.மக்களை மத ரீதியாக பிரித்து வருகின்றனர், இதன் மூலம் கலவரம் நேர்ந்தால் முதன் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் தான் என்பதை நான் ஒரு ஒரு நாலும் கூறிக்கொண்டே வந்தேன். பாஜக ஆட்சி செய்யும் ஒவ்வொரு மாநிலத்திலும் இதை தான் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

மணிப்பூரில் ஒரே நாளில் கலவரம் உண்டாகவில்லை; ஆண்டாண்டு காலமாக அங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. கலவரம் தனியும் நேரத்தில் பாஜக அங்கே ஆட்சிக்கு வந்து தற்போது கலவரத்தை தூண்டியுள்ளனர். மணிப்பூரில் மனதை உருக்கும் அளவுக்கு மோசமாக நினைத்து கூட பார்க்க முடியாத வன்கொடுமை நடந்துள்ளது. மாநிலங்களிலும் பாஜக, ஒன்றியத்தியிலும் பாஜக ஆட்சி செய்கிறோம், இரட்டை இன்ஜின் என்று மார்த்தட்டி பேசும் அந்த நேரத்தில், பாஜக அங்கு ஆட்சிக்கு வருகிறது.

மே 3-ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரை நின்றபாடில்லை. மக்கள் கொல்லப்பட்டனர், தேவாலயங்கள் அழிக்கப்பட்டன, பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டனர், அந்த மாநில முதல்வர் குக்கி இனத்தவர்கள் மற்றும் நாகா இனத்தவரை கொச்சை படுத்தும் விதமாக பேசி கொண்டு இருக்கிறார். 140-க்கும் மேற்பட்டோர் கொள்ளப்பட்டு உள்ளனர். 1000-த்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து உள்ளனர், மே மாதம் தொடங்கிய கலவரம் இன்று வரை அடங்கவில்லை, பிரதமர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்.

இதை எதையும் கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி 7 நாட்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு அங்கே இருக்கக்கூடிய மக்களை சந்தித்து கையசைத்துக் கொண்டு, வெளிநாட்டில் இருக்கக்கூடிய தலைவர்களை சந்தித்து கை குலுக்கிக் கொண்டு விருந்து சாப்பிட்டு இந்த நாட்டில் மதக் கலவரங்கள் இல்லை, மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்கிறோம் என்று பொய்யை பிரதமர் பேசுகிறார்.

வாய்யை திறந்து பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உள்துறை அமைச்சர் சென்று வந்தும் கூட கலவரம் நடந்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து கொண்டிருக்கிறார்கள். யாராலும் சகித்து கொள்ள முடியாத ஒரு வீடியோ வருகிறது. மனித இனமே தலைகுனியும் அளவுக்கு அந்த வீடியோ வந்தது. நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு, வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மணிப்பூரில் இவ்வளவு சம்பவம் நடந்த பின்னும், சமூக வலைதளத்தில் பழங்குடி இன மக்கள் வன்கொடுமை ஆளான வீடியோ வெளியே வந்த பின் தான், பிரதமர் மோடி தான் மெளனத்தை கலைத்தார். ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க மோடியால் முடியவில்லை. ஆனால் 'பாரத மாதாவுக்கு ஜே' என்று பாஜகவினர் கூறுகிறார்கள். அப்படியானால் எந்த மாதாவை காப்பாற்றினார்கள்? எந்த பெண்ணை காப்பாற்றினீர்கள்?

பெண்களின் உடலை மதிக்கத்தெரிந்த சமூகத்தை உருவாக்குவதே சரியான ஆட்சி என்றும் மணிப்பூரில் சம்பவத்தில் கள்ள மெளனத்தை கடைபிடித்து உள்ளது எனவும் ஆட்சியில் இருப்பவர்கள் பொறுப்பேற்று தலைகுனிந்து பதிவு விலக வேண்டும், அவர்கள் பதவி விலக மாட்டார்கள் அவர்களுக்கு மனசாட்சி இல்லை, இதுகுறித்து விவாதிக்க கூட அவர்கள் தயாராக இல்லை, நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் நிலை வந்துவிடும் என்று எச்சரித்த பிறகு பிரதமர் வாய் திறக்கிறார். இப்படிபட்ட ஒரு ஆட்சி இந்த நாட்டுக்கு தேவையா?

தாய் நாடு, தாய் நாடு என்று பேசுவார்கள் ஆனால் இங்கு உள்ள இந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமையை பாஜக உருவாக்கியுள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் எத்தனை கலவரங்கள் நடந்துள்ளன. வீட்டில் மாட்டு கறி வைத்து இருந்தனர் என்று எத்தனை பேர் அடித்து கொலை செய்யப்பட்டனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் பாஜக ஆளும் மாநிலத்தில் உள்ளன" என்றார்.

Also Read: “களம் அழைக்கிறது வாக்குச்சாவடி வீரர்களே.. ஆயத்தமாவீர்!” - உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்