Politics

மணிப்பூரில் மேலும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.. நடவடிக்கை எடுக்காத பாஜக அரசு !

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் ஒன்றிய அரசு மணிப்பூர் வன்முறையைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. இதனால் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநிலத்தை விட்டு அண்டை மாநிலங்களுக்குத் தஞ்சமடைந்துள்ளனர். இப்படி மணிப்பூர் மாநிலம் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகச் சாலையில் அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

மேலும் இந்த கொடூர சம்பவம் மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தைச் சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகச் சாலையில் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்களைக் கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.

மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் மணிப்பூரில் கலவரம் தொடங்கிய நாள் முதல் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் தற்போது மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இம்பாலில் உள்ள கார்வாஷிங் மையம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு பழங்குடியின பெண்களை கும்பல் ஒன்று இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீதியில் நிர்வாணமாக இழுந்து சென்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மே 4 ந் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உயிரிழப்பு என்ற அளவில் மட்டுமே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், அதே நாளில் குக்கி சமூகத்தை சேர்ந்த வேறொரு பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் சடலத்தின் புகைப்படத்தை குக்கி சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். மே 4 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று இருக்கலாம் என்று சமுக செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை ஆறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட வில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Also Read: மணிப்பூர் கொடூரம் பாஜக ஆளாத மாநிலத்தில் நடந்திருந்தால், என்ன பேசி இருப்பார் பிரதமர் ? -முரசொலி கேள்வி!