Politics
மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் RSS.. முன்னணியில் இந்துத்துவ அமைப்புகள்- எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி
1949-ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது மணிப்பூர். 1956-ல் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, 1972-ல் மாநில அந்தஸ்து பெற்றது. புவியியல் ரீதியாக பெரும்பாலான பகுதி மலைகள் தான். சமவெளி என்பது பத்து சதவிகித பள்ளத்தாக்கு நிலம்தான். இந்தப் பள்ளத்தாக்கு பகுதியில் பெரும்பான்மையாக அதாவது மாநில மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மணிப்பூரி மொழி பேசும்‘மைத்தி’ இன மக்கள் வாழ்கிறார்கள். 90 சதவிகித மலைப் பகுதிகளில், குக்கி, நாகா, சோமி உள்ளிட்ட பழங்குடி குழுக்களைச் சேர்ந்த மக்கள் பரவி வாழ்கிறார்கள். குறிப்பிட்டுச் சொன்னால், பள்ளத்தாக்குப் பகுதியில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். மலைப் பகுதி பழங்குடிகளில் பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவர்கள்.
இந்த இரு சமூக, இனக்குழு மக்களுக்கிடையே உள்ள முக்கிய முரண் அவர்களின் வாழ்விடம். அரசியலமைப்புச் சட்டம் 371-சி பிரிவின்படி வெளியிடப்பட்ட அறிக்கை, ‘மலைப் பகுதிகளில் பழங்குடிகள் அல்லாத யாரும் நிலம் வாங்க முடியாது’ என்று தடுக்கிறது. (ஆனால், பழங்குடியினர் சமவெளி, பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலம் வாங்கிக் கொள்ள முடியும்.) இந்தக் காரணத்தினால் கடந்த 2013-ம் ஆண்டில், “நாங்கள் வாழும் சமவெளி நிலம் எங்களுக்குப் போதவில்லை. பர்மா, பங்களாதேஷிலிருந்து வரும் அகதிகளால் எங்கள் வாழ்விடத்துக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், எங்களையும் பழங்குடிகள் என்று அறிவித்துவிடுங்கள்” என்று மைத்தி இந்துக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் கிளம்பின. இது பிரச்சனையின் முதல் புள்ளி.
பத்து ஆண்டுகள் கழித்து, கடந்த 2023 ஏப்ரல், 19-ம் தேதி மணிப்பூர் நீதிமன்றம் இது தொடர்பாக தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், மைத்தி இந்துக்களையும் பழங்குடியினராகச் சேர்ப்பது குறித்து, 4 வாரங்களுக்குள் மாநில அரசு (பா.ஜ.க), மத்திய அரசுக்கு (பா.ஜ.க) தன்னுடைய பரிந்துரைகளை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கெனவே, BC, SC, EWC உள்ளிட்ட இடஒதுக்கீடுகள் சமவெளியில் வாழும் மைத்திகள் அனுபவித்துவருகிறார்கள். மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்குகளில் வாழும் மைத்தி இந்துக்கள் வசமிருக்கின்றன. அரசுத் துறைகள், கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் அவர்களுக்கே முன்னுரிமை கிடைத்து வருகிறது. தற்போது அவர்களைப் பழங்குடிகளாகவும் மாற்றி அறிவித்தால், தங்களுடைய நிலமும் எதிர்காலமும் பறிபோகும் என்று மணிப்பூர் பழங்குடி குழுக்கள் எதிர்க்கத் தொடங்கினார்கள்.
இதற்காக, மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) மலைப் பகுதிகளில் 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடத்தியது. பிறகு, மே-3ம் தேதி மணிப்பூரின் தலைநகர் இம்பால் (சமவெளி) உள்பட 10 இடங்களில் பேரணி நடத்த ஏற்பாடு செய்தது. இதில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் திரண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். அந்தப் பேரணியில் தான் முதன்முதலாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
தாக்குதலுக்கு முக்கிய காரணமாக, மைத்தி இனப் பெண் ஒருவரை குக்கி பழங்குடிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டனர் என்று போலியான செய்தி ஒன்று பரப்பப்பட்டதுதான். அந்த வெறுப்புப் பிரசாரத்தின் அனல் தொடர் வன்முறைக்கான நெருப்பைப் பற்றவைத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்களில் பெரும்பான்மையானவர்கள் குக்கிகள். இவர்கள் அதிகம் வசிக்கும் சுரசந்த்பூர் மாவட்டத்திலும் தலைநகர் இம்பாலிலும் குக்கி பழங்குடிகளைக் குறிவைத்து, மைத்திகள் தாக்குதலில் இறங்கியிருக்கிறார்கள்.
இதற்காக, எந்தெந்த வீடுகளில் இந்து மத அடையாளச் சின்னங்கள், கொடிகள் இருக்கின்றனவோ அவைமட்டும் தவிர்க்கப்பட்டு, குக்கிகளின் வீடுகள் மீது தாக்குதல் அதிகரித்திருக்கிறது. இந்த வன்முறையில், வீடுகள், பள்ளிக்கூடங்கள், வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டிருக்கின்றன. குக்கி பழங்குடிகள், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போர் புரிந்ததற்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை தகர்க்கப்பட்டிருக்கின்றன. மே 3-ம் தேதி வன்முறையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட உயிர்பலிகள் நிகழ்ந்திருக்கின்றன. பலர் வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
அன்று இரவே மணிப்பூரின் எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ராணுவம் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்களை(!) கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைமையில்தான், மணிப்பூர் மாநில மல்யுத்த வீராங்கனை மேரிகோம், “எங்கள் மாநிலம் பற்றி எரிகிறது” என்று ட்வீட் மூலமாக பிரதமருக்குக் கோரிக்கை விடுத்தார். ஆனால், அப்போது கர்நாடக தேர்தல் பிஸியில் இருந்தது ஏழைத்தாயின் மகனின் மொத்த கூடாரமும்.
மணிப்பூரின் இரு இனக்குழுக்களுக்கு இடையே பரப்பிவிடப்பட்ட இந்த வெறுப்பரசியல், வன்முறை, கலவரங்களுக்குப் பின்னால், நீதிமன்ற உத்தரவு மட்டுமல்ல... மதம், அரசியல், பொருளாதார வளச் சுரண்டல் உள்ளிட்ட காரணங்களும் இருக்கின்றன. 2022-ல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில், பாஜக 32 இடங்களில் வென்றது. அவற்றில் இம்பால் (17), பிஷ்னுபூர் (4) சுரசந்த்பூர்(3), சந்தேல் (2) ஆகிய பா.ஜ.க வென்ற தொகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் மைத்தி இந்துக்கள்.
300 ஆண்டுகள் பழமையான மைத்திகளின் ‘சனமகி’ பண்பாடும், இந்து மத சம்பிரதாயங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்துகிடக்கிறது. இதனால், பெரும்பான்மை மைத்திகள்மீது அக்கறை காட்டுவதாகச் சொல்லிக்கொண்டு, சிறுபான்மையினரான கிறிஸ்தவ குக்கி பழங்குடிகளை அவர்களுக்கு நேரெதிராக நிறுத்தும் அரசியல் அங்கு பா.ஜ.க-வுக்குப் பலனளித்திருக்கிறது. இதற்காக, மணிப்பூரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று மைத்திகள் தரப்பிலான கோரிக்கை முதன்மை படுத்தப்படுகிறது. இது பழங்குடியினரை சமவெளிகளில் இருந்து வெளியேற்றுவதற்கான மறைமுகக் குரல்தான்.
ஒருபுறம், காட்டைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியினர் வாழும் மலைப் பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றி, அவர்களின் வீடு, கட்டடங்களை இடிக்கும் பணிகளையும் ஆளும் பா.ஜ.க அரசு மேற்கொள்கிறது. மறுபுறம், சட்டமீறல்களுடன் மலைப் பகுதியில் பழங்குடியினர் அல்லாதவர்களின் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே, அண்டை நாடுகளிலிருந்து குக்கி இனப் பழங்குடிகள் மணிப்பூரில் ஊடுருவி இருக்கிறார்கள் என்றும், அவர்களை உள்ளூர் குக்கி மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று திட்டமிட்ட வெறுப்புப் பிரசாரமும் அங்கு மேற்கொள்ளப்படுகிறது.
மத ரீதியாக நடைபெறும் அத்துமீறல்களும் இவற்றுக்குச் சளைத்ததல்ல. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட எண்ணற்ற கிறிஸ்துவ தேவாலயங்களை, மாநில அரசுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லி இடித்துத் தள்ளிவருகிறது பா.ஜ.க அரசு. கத்தோலிக்க தேவாலயம், லூத்ரன் சர்ச், பாப்டிஸ்ட் கன்வென்ஷன் சர்ச் என நூற்றுக்கணக்கான தேவாலயங்களை தற்போதைய வன்முறையில் எரிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ‘இவை அனைத்தும் 1983-ல் அசாமில் நடைபெற்ற வன்முறை - நெல்லி இனப் படுகொலைகளை அடியொற்றி நடைபெறும் சம்பவங்களை நினைவு படுத்துகின்றன... அதன் பின்னணியில் இருந்ததும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தான்...’ என்கிறார்கள் அசாமைச் சேர்ந்த பழங்குடி மக்கள்.
தமிழ்நாட்டில் நாமறிந்த இந்துத்துவ அமைப்புகள் போலவே, மணிப்பூரிலும் அரம்பை தெங்கால், மைத்தி-லீபன் உள்ளிட்ட சில பாசிச பா.ஜ.க-வின் ஆசிபெற்ற இந்துத்துவ அமைப்புகளே இந்த வன்முறையினை முன்னின்று நடத்தியிருக்கின்றன. நவீனரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியபடி இருச்சக்கர வாகனங்களில் கும்பலாகச் சென்று, காவல் நிலையங்களைச் சூறையாடி, குக்கி பழங்குடி கிராமங்களில் புகுந்து, அவர்களின் வீடுகளை, பொருட்களை, பெண்களை, ஆண்களை நாசம் செய்து கொலைகளில் ஈடுபடுகின்றன. இந்த இந்துத்துவ அமைப்புகளின் முக்கியக் கொள்கை, மணிப்பூரின் மன்னர் காலத்துப் பண்பாடான ‘சனமகி’ ராஜ்ஜியம் திரும்பவும் வரவேண்டும் என்பதுதான். மணிப்பூர் மாநில ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பறப்பது இவர்களின் சனமகி கொடியே.
பொருளாதார ரீதியாக, பழங்குடிகளின் நிலம்தான் சமவெளியில் வாழும் மைத்திகளின் இலக்கு. தங்களையும் பழங்குடிகளாக அறிவித்துவிட்டால், மலைப்பகுதி நிலங்களை அவர்களால் வாங்கிவிட முடியும். ஆனால், இது மைத்திகளின் ஒட்டுமொத்த மனநிலை அல்ல. அதே சமூகத்தின் பணம் படைத்த அதிகார வர்க்கத்தின் கோரிக்கை. பா.ஜ.க அரசின் தேசிய சமையல் எண்ணெய் திட்டத்துக்கு National Mission on Edible Oils-Oil Palm (NMEO-OP) வடகிழக்கின் 2.5 லட்சம் ஹெக்டேர் நிலம் வேண்டும். அதன் அளப்பரிய நீர்வளம் வேண்டும். பதஞ்சலி, காத்ரேஜ், ருச்சி, சஞ்சய் கொயாங்கோ உள்ளிட்ட பெரு முதலாளிகளின் எண்ணெய் வணிகம் செழிக்க பிரச்சனையின்றி பழங்குடிகளின் நிலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அவர்கள் வாழும் சதுப்பு நில, நீர்நிலைகளை விட்டு அவர்களைத் துரத்த வேண்டும்.
மணிப்பூர் பழங்குடிப் பெண்களை நிர்வாணமாக்கி, நடுவீதியில் இழுத்துச் சென்று, அவர்களின் தந்தை, சகோதரனைக் கொன்று குவித்த கொடூரம் வீடியோவாக வெளிவந்ததும், இரண்டரை மாதங்களாக வாய்திறக்காத பிரதமர், ‘இது 140 கோடி இந்திய மக்களின் அவமானம்’ என்றிருக்கிறார்.
ஆம், தரகு முதலாளித்துவ அடிமைகளும், மதவெறி, இனவெறியைத் தூண்டிவிட்டு, பாசிச கொள்கைகள் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி, பெண்களை நிர்வாணமாக்கி, சிறுமிகளை எரித்து, விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொலை செய்து, பழங்குடிகளை அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றும் வெறுப்பரசியல் கும்பலை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்திருப்பதற்காக நாங்கள் நிச்சயம் அவமானப்படத்தான் வேண்டும். இது எங்களின் அவமானம்தான்.
- எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!