Politics
“‘I-N-D-I-A’-வை எதிர்க்க பாஜகவுக்கு தைரியம் உண்டா?” - மோடியை தாக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் !
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என அனைத்து கட்சித் தலைவர்களும் பேசியுள்ளனர்.
மேலும் ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தாக இருந்தது. இதையடுத்து நேற்று மாலை பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆறு முக்கிய அடிப்படை செயல்திட்டங்களை உருவாக்குவது குறித்தும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமில்லாமல் அதை உரிய முறையில் தேர்தல் களத்தில் செயல்படுத்த பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டத்துக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
பின்னர் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “இந்தியா என்ற கருத்தோட்டமே மோடி ஆட்சியில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. நாங்கள் நடத்தும் இந்த போராட்டம் இரு கட்சிகளுக்கு இடையேயான போராட்டம் அல்ல; இது பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம்.
இந்திய நாட்டை காப்பாற்றவே இந்த போராட்டம். இந்தியாவுக்கு எதிராக எவராலும் போராட முடியாது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி நடத்தவுள்ள போராட்டம் இந்தியாவுக்கானது. நாட்டில் பொருளாதார ரீதியில் ஏற்றத் தாழ்வுகளை பிரதமர் மோடி ஏற்படுத்தி விட்டார். இந்தியாவின் செல்வம் தற்போது மோடி மற்றும் பாஜகவால் தேர்வு செய்யப்பட்ட ஒரு சிலரின் கையில்தான் உள்ளது.” என்றார்.
தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது, " “பெங்களூரு கூட்டம் பயனுள்ளதாக ஆரோக்கியமாக இருந்தது. இனம், மொழி, மதங்களை கடந்து அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் ‘I-N-D-I-A’ கூட்டணியை பாஜகவால் வீழ்த்த முடியாது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியாவை எதிர்க்க பாஜகவுக்கு தைரியம் உண்டா? எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம், கூட்டம் என அனைத்தும் இந்தியா என்ற பெயரிலேயே நடைபெறும். இந்தியாவை பேரழிவில் இருந்து காப்பாற்றுவோம். பாஜக அரசின் கீழ் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படவில்லை. நாங்கள் தாய் நாட்டை நேசிக்கிறோம். நாட்டுப் பற்று கொண்ட நாங்கள் நாட்டின் நலனுக்காக செயல்படுவோம்.” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது. பண வீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் மோடியின் ஆட்சியில் எல்லா துறைகளிலும் குழப்பம்தான் ஏற்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது.
10 ஆண்டுகள் ஆட்சி செய்யும் வாய்ப்பை மோடி பெற்றார். மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்த அவர், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டத்தை உச்சத்திற்கு கொண்டு சென்று இந்திய பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இன்னும் ஒத்த கருத்துள்ள சில கட்சிகள் இணையும்" என்றார்.
பின்னர் பேசிய மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, "இன்று காலையில் ஒருவர் நாங்கள் குடும்பங்களுக்காக வேலை பார்ப்பதாக சொன்னார். உண்மைதான். இந்த நாடுதான் எங்களின் குடும்பம். நாட்டுக்காகதான் நாங்கள் பணி செய்கிறோம்." என்று NDA நடத்திய கூட்டத்தில் மோடி பேசியதற்கு பதிலடி கொடுத்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!