Politics

“என் வீட்டுல சிவப்பு கலரா..” - ட்விட்டரில் INDIA என்ற பயோவை மாற்றிய பாஜக முதல்வர்.. நெட்டிசன்ஸ் கிண்டல்!

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என அனைத்து கட்சித் தலைவர்களும் பேசியுள்ளனர்.

மேலும் ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தாக இருந்தது. இதையடுத்து நேற்று மாலை பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆறு முக்கிய அடிப்படை செயல்திட்டங்களை உருவாக்குவது குறித்தும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமில்லாமல் அதை உரிய முறையில் தேர்தல் களத்தில் செயல்படுத்த பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டத்துக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இந்த நிலையில் INDIA என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பாஜகவினர் மத்தியில் சற்று புகைச்சல் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இன்று 2-வது முறையாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனால் பாஜகவும் NDA என்று பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் சில காட்சிகளை கூட்டியது. எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு நகர்வும் பாஜகவுக்கு மிகப்பெரிய பயத்தை கொடுக்கிறது.

தற்போதும் அதேபோல் பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா, தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள INDIA என்ற பயோவை 'பாரத்' என்று மாற்றியுள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம். இது 'பாரதம்'. மோடி பாரதத்திற்கான பிரதமர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இவரை நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். "எண்ணம்மா கண்ணு" படத்தில் வடிவேலு "என் வீட்டுல சிவப்பு கலரா.." என்று கூறி லைட்டை துப்பாக்கியால் சுட்டு விட்டு, கோவை சரளாவின் நெற்றியில் உள்ள சிவப்பு குங்குமத்தை அழிப்பார். அதனை மையமாக வைத்து ஹிமந்த பஸ்வாவையும், பாஜகவையும் கலாய்த்து வருகின்றனர்.

Also Read: “‘I-N-D-I-A’-வை எதிர்க்க பாஜகவுக்கு தைரியம் உண்டா?” - மோடியை தாக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் !