Politics
“தமிழ் மொழியை அறிவிக்க விடாமல் ஏதேனும் சக்தி தடுக்கிறதா?” - பிரதமர் மோடிக்கு கேள்வியெழுப்பிய திமுக MP!
இந்தி மொழியைப் போல தமிழ் மொழியையும் நாட்டின் அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் விவரம் வருமாறு:-
"தங்களது சமீபத்திய 3 நாள் அமெரிக்கப் பயணத்தின் கடைசி நாளில், வாஷிங்டன் நகரத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்களிடம் பேசும் போது, ஹீஸ்டன் பல்கலைக்கழகத்தில், தமிழ் கற்பிக்கும் வகையில் ஓர் இருக்கை நிறுவப்படும் என்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டீர்கள். மேலும் அந்த இருக்கை உலகின் மிகப் பழமையான மொழியான தமிழுக்கும், தமிழர்களின் பண்பாட்டிற்கும் உள்ள செல்வாக்கை மேலும் உயர்த்திப் பிடிக்கும் எனவும் கூறப்பட்டது. மொழிகளைப் பற்றி விவாதம் நடக்கும் போதெல்லாம், நீங்கள் உலகிலேயே மிகவும் மூத்த மொழி தமிழ் என்றும் அது எங்கள் நாட்டைச் சேர்ந்தது என்றும் பெருமையுடன் கூறுவதைக் கேட்டு, தமிழர்களாகிய நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்.
இந்த உண்மையை உளமார உணர்ந்துள்ள தாங்கள், வெகு சமீபத்தில் தோன்றிய இந்தி மொழியை நம் நாட்டில் அலுவல் மொழியாக இருப்பதைப் போல, தமிழ் மொழியையும் அலுவல் மொழியாகக் கூறி அறிவிப்பு வெளியிடலாமே! அவ்வாறு தங்களைச் செய்ய விடாமல் ஏதேனும் ஒரு சக்தி தடுக்கின்றதா என்று எனக்கு தெரியவில்லை.
சாதி, மதம் மற்றும் சமஸ்கிருத மொழி ஆதிக்கம் என பல்வேறு சக்திகளால் ஒடுக்கப்பட்டுள்ள தமிழர்கள், தாங்கள் இது குறித்து தக்க அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் தங்களின் தமிழ் குறித்த பெருமையான பேச்சுக்களை நம்ப மாட்டார்கள். தாங்கள் தமிழ் குறித்து கொண்டுள்ள புரிதலை, தங்கள் செயலில் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
மேலும் மாண்புமிகு பிரதமர் அவர்களே! தமிழ் மொழியைப் பற்றி தாங்கள் கூறும் கருத்துக்கள் உங்களது இதயத்தில் இருந்து வருமானால், இந்த உலகில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு, தாங்கள் ஒதுக்கி செய்யும் நிதி அளவிற்குத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் உடனடியாக நிதியை அதிகரித்து அறிவிக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும், அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாக கற்பிக்கும் வகையில், அதாவது தாய்மொழி, இந்தி அல்லது ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியைக் கற்பிக்கக் கூடிய வகையில் உடனடியாக ஒரு சட்டம் கொண்டு வாருங்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு அரசு ஆணையாவது வெளியீடுகள் என்று தங்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலே கூறியுள்ள கருத்துக்களைக் கனிவுடன் பரிசீலித்து, இந்தி மொழியுடன், தமிழ் மொழியையும் அலுவல் மொழியாக அறிவிப்பதற்குத் தக்க நடவடிக்கைகள் எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தக்க ஆணைகள் பிறப்பிக்கும்படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!