Politics
"பாஜக MP பிரிஜ் பூஷன் தண்டிக்கப்படவேண்டியவர்" -வெளியானது டெல்லி காவல்துறையின் குற்றப்பத்திரிக்கை !
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகிறது.
அதன்பின்னர் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறக்கப்பட்ட நிலையில், அதனை அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் மல்யுத்த வீரர்களை தடுத்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டுக்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். ஆனால் மல்யுத்த வீரர்களுடன் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர்களும் அவர்களின் இந்த முடிவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்ததால் பதக்கங்களை ஆற்றில் வீசும் போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் கைவிட்டு பிரிஜ்பூஷனை 5 நாட்களில் கைது செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என மல்லியுத்த வீராங்கனைகள் கெடு விதித்தனர்ஆனால், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி காவல்துறையின் குற்றப்பத்திரிகையில், பிரிஜ் பூஷன் சிங் பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் பின்தொடர்தல் போன்ற குற்றங்களுக்காக “விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் உட்பட 108 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில், பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் புகார்களில், 15 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டியுள்ளனர் என்றும், அதில் சிறுமிகளும் இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது இனியாவது ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!