Politics

ஆளுநர் குறித்த புகார் கடிதம் : “அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?” - CPIM கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

தருமபுரி மாவட்டத்தில்‌ மார்க்சிஸ்ட் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆளுநர் குறித்து விமர்சித்தார்.

இது குறித்து பேசிய அவர், "ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அரசும், ஆளுநரும் வெவ்வேறு பக்கம் இருந்தால், அது மக்களுக்கு தான் பாதிப்பு. ஒரு அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநரின் மீது, புகாரளிக்கும் உரிமை முதலமைச்சருக்கு உண்டு. இதை கேட்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆளுநர் என்ன? அண்ணாமலையின் கையாளா?. அண்ணாமலையின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதற்கு குடியரசுத்தலைவர் என்ன முடிவெடுக்க போகிறார் என்று தெரியவில்லை. சமீப காலமாக பாஜகவினர் அதிகம் கைதாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் அதிகபட்சமாக கைதாக கூடியவர்கள் பாஜகவினர் தான். அந்தளவிற்கு‌ அக்கட்சியில் ரியல் எஸ்டேட் கொலை, ஊழல், ரவுடிசம் மலிந்து கிடக்கின்றன.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவர் வர மறுக்கிறார். ஆனால் ஈசா யோக மையத்திற்கு வருகிறார். பொதுமக்களுக்கு தேவையான மருத்துவமனையை விட, ஈசா யோக மையம் அவ்வளவு முக்கியமானதில்லை. ஈசா யோக மையத்திற்கு செல்கிறார்; ஆனால் ஒரு அரசு மருத்துவமனையை திறந்து வைக்க வரவில்லை.

இதற்கு பின் மோடியும், அமித்ஷாவும் இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே. தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்." என்றார்.

Also Read: மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ.. இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணனை அதிரடியாக கைது செய்த காவல்துறை !