Politics
“பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாததற்கு சீனா தான் காரணம்..” - பகீர் கிளப்பும் பாஜக சுப்பிரமணியன் சாமி !
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் 2 பழங்குடியினருக்கு தற்போது மோதல் போக்கு இருந்து வருகிறது. இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று பீரன் சிங் என்ற பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக இருக்கிறார். பாஜக அங்கே மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பிரச்னைகள் அதிகரித்த வண்ணமாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அம்மாநிலத்தில் இருக்கும் 'மைத்தேயி' என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் 'குக்கி' என்ற சமூகத்தினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இரு சமூகத்தினரிடையே பிரச்னைகள் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அங்கே இருக்கும் ஒன்றிய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வராமல் ஒன்றிய - மாநில பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து அம்மாநில பாஜக முதலமைச்சர் மீது அம்மாநில பாஜக அமைச்சர்களே புகார் கடிதமும் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாமல் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சம்பவத்தால் மோடிக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்துள்ளது. மேலும் தற்போது வரை அங்கே மோடி எட்டிக்கூட பார்க்கவில்லை.
இந்த நிலையில் மோடி மணிப்பூருக்கு செல்லாததற்கு காரணம் சீனா தான் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. இதற்கு காரணம் பர்மா [மியான்மர்] வழியாக சீனா வழங்கும் ஆயுதங்களால் மைதிக்கு (இந்து) எதிரான மக்கள் குறிவைக்கப்படுவது தான். முன்னதாக லடாக்கில் சீனா நம் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது மோடி அச்சமடைந்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது மியான்மர் மூலம், அங்குள்ள மைத்தேயி சமூக மக்கள் மீது சீனா தாக்குதல் நடத்த ஆயுதம் வழங்குவதாகவும், சீனாவுக்கு பயந்து தான் பிரதமர் மோடி இந்த விஷயத்தில் தொடர்ந்து அமைதியாக இருந்து வருவதாகவும் சுப்பிரமணியன் சாமி விமர்சித்துள்ளார். இது தற்போது அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மோடி சந்திக்காமல் இருந்து வரும் நிலையில், ராகுல் காந்தி அங்குள்ள மக்களை நேரில் காண இன்று மணிப்பூர் சென்றார். ஆனால் அவரை இம்பால் விமான நிலையத்தில் இருந்து சுராசந்த்பூர் சென்ற ராகுல் காந்தியை பிஷ்ணுபூர் பகுதியில் போலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!