Politics

50-வது நாளாக பற்றியெரியும் மணிப்பூர்.. மக்களை சந்திக்க பயந்து யோகா நிகழ்ச்சிக்கு அமெரிக்க செல்லும் மோடி!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.

இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும், மாநிலத்தில் பாஜக ஆட்சி நீடிக்கும் நிலையில், அந்த அரசை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது மணிப்பூர் கலவரம் 50-வது நாளை எட்டியுள்ள நிலையில், மணிப்பூர் சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், மோடி நேரம் ஒதுக்காத நிலையில்அவர்கள் நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர்.

மேலும், மணிப்பூர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டவர வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவந்த நிலையில், அவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க மறுத்ததால் அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் அமைதி ஏற்படுத்த கோரிக்கை விடுத்து மனு வழங்கினர். இதனிடையே பிரதமர் மோடி இன்று யோகா நிகழ்ச்சிக்காக இன்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: அடிமை அதிமுக கும்­ப­ல் எதுவும் தெரியாமல் கிண்டி மாளி­கை­யில் நொண்டி விளையாடுகிறார்கள் -முரசொலி விமர்சனம்!