Politics
எங்கள் கண்ணியம் காலடியில் மிதித்து நசுக்கப்படுகிறது.. -நாட்டுக்காக பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர் வேதனை!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகிறது.
அதன்பின்னர் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறக்கப்பட்ட நிலையில், அதனை அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் மல்யுத்த வீரர்களை தடுத்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டுக்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். ஆனால் மல்யுத்த வீரர்களுடன் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர்களும் அவர்களின் இந்த முடிவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்ததால் பதக்கங்களை ஆற்றில் வீசும் போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் கைவிட்டு பிரிஜ்பூஷனை 5 நாட்களில் கைது செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என மல்லியுத்த வீராங்கனைகள் கெடு விதித்தனர்.
ஆனால், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் அவரின் கணவர் சத்யவர்த் கதியன் ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், "நாங்கள் நாட்டுக்காக பல பதக்கங்களை வென்று கொடுத்தும் எங்களது கண்ணியம் காலடியில் மிதித்து நசுக்கப்படுகிறது. எங்களது மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாங்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளோம். வாழ்நாள் முழுவதும் மல்யுத்தம் குறித்து மட்டுமே சிந்தித்த எங்களுக்கு இதுபோன்ற சூழல்களை கையாளத் தெரியவில்லை. நாங்கள் நிறைய பேரை சந்திக்கிறோம் அவர்களில் யாரை நம்புவது என எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் எங்களை மன்னித்துவிடுங்கள். எங்களுடன் துணை நின்று ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!