Politics

9 ஆண்டில் இந்தியாவின் 55 லட்சம் கோடி கடனை 155 லட்சம் கோடியாக உயர்த்திய மோடி ! காங்கிரஸ் விமர்சனம் !

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் வளங்களை தனியாருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்தும், அரசு நிறுவனங்களை தனியாருக்கும் கொடுக்கும், தனியாரின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்தும் முற்றிலும் கார்ப்பரேட்க்கு சாதகமான அரசாக செயல்பட்டு வருகிறது. மேலும், இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியும், பல்வேறு வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளிடம் கடன் வாங்கியும் நிலைமையை சமாளித்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடியை, ஒன்பதே ஆண்டுகளில் பிரதமர் மோடி ரூ.155 லட்சம் கோடியாக உயர்த்தியிருக்கிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், " கடந்த 67 ஆண்டுகளில் 14 பிரதமர்களின் கீழ் இந்தியாவின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் மோடி பிரதமராகி 9 ஆண்டுகளில் நாட்டின் கடன் ரூ.155 கோடியாக உயர்ந்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையைச் சீரழித்து, மிகப்பெரிய அளவில் வேலையின்மையை உருவாக்கி, பணவீக்கத்தை மோடி அரசு அதிகரித்திருக்கிறது .ரூ.100 லட்சம் கோடி கடன் என்பது மிகவும் ஆபத்தான அளவு.எனவே நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்" என்று கூறியுள்ளார்.

Also Read: அதிமுக ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் உரிமையை அடகு வைத்துவிட்டார்கள் -முதல்வர் விமர்சனம் !