Politics
ஒடிசா இரயில் விபத்து : ஒன்றிய மோடி அரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே அடுக்கடுக்காக சரமாரி கேள்வி !
ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.
அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின. அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது. தற்போது வரை 280 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் நிறைவடைந்து ரயில் வழித்தடங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழு, ஒடிசா மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், இந்திய விமானப்படை என பலதரப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த சூழலில் இந்த கோர விபத்துக்கு காரணம் ஒன்றிய அரசின் அலட்சியம் என எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய வரலாற்றில் ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்து தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த உயிர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இதற்காக பண இழப்பீடோ அல்லது இரங்கல் வார்த்தைகளோ இந்த சோகத்தை ஈடுசெய்ய முடியாது. போக்குவரத்து துறையில் அனைத்து முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இந்திய இரயில்வே இன்னும் ஒவ்வொரு சாதாரண இந்தியனுக்கும் ஒரு உயிர்நாடியாக உள்ளது. இது மிகவும் நம்பகத்தனமான போக்குவரத்து முறை மட்டுமல்ல, மிகவும் சிக்கனமான போக்குவரத்து முறையும் கூட.
ஆனால், ரயில்வேயை அடிப்படை அளவில் பலப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, செய்திகளில் இருக்க மேலோட்டமான 'டச் அப்' மட்டுமே செய்யப்படுகிறது. ரயில்வேயை மிகவும் திறம்பட, மேம்பட்ட மற்றும் திறமையானதாக மாற்றுவதற்குப் பதிலாக, மாற்றாந்தாய் சிகிச்சையின் மூலம் அது நிறைவேற்றப்படுகிறது. இதற்கிடையில், தொடர்ந்து தவறான முடிவெடுப்பது ரயில் பயணத்தை பாதுகாப்பற்றதாக ஆக்கியது மற்றும் எங்கள் மக்களின் பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளது.
அதில் சில முக்கியமான உண்மைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
=> தற்போது இந்திய ரயில்வேயில் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. உண்மையில் கிழக்குக் கடற்கரை ரயில்வேயில் - இந்த துயரமான விபத்து நடந்த இடத்தில் சுமார் 8278 பணியிடங்கள் காலியாக உள்ளன. PMO மற்றும் கேபினட் கமிட்டி ஆகிய இரண்டும் நியமனங்களில் முக்கிய பங்கு வகிக்கும் மூத்த பதவிகளின் விஷயத்தில் கூட அக்கறையில்லை. ரயில்வே துறையில், பெரிய அதிகாரிகளின் பணியிடங்கள் உட்பட 3 லட்சம் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும், இன்னும் ஏன் அது நிரப்பப்படவில்லை?
=> ரயில்வேயில் ஆட்கள் பற்றாக்குறையால் லோகோ பைலட்டுகள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது என்பதை ரயில்வே வாரியமே சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. லோகோ பைலட்டுகள் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானவர்கள் மற்றும் அவர்களின் அதிக சுமை விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்பதை நிரூபிக்கிறது. அவர்களின் பணியிடங்கள் ஏன் இன்னும் நிரப்பப்படவில்லை?
=> கடந்த பிப்ரவரி மாதம் மைசூரில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்ட போது சிக்னல் அமைப்பைச் சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் தென்மேற்கு மண்டல இரயில்வேயின் முதன்மை தலைமை இயக்க மேலாளர். ஆனால் இந்த முக்கியமான எச்சரிக்கையை ரயில்வே அமைச்சகம் எப்படி புறக்கணிக்க முடியும்?
=> நாடாளுமன்ற நிலைக்குழு தனது 323-வது அறிக்கையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் (CRS) பரிந்துரைகளை ரயில்வே வாரியம் புறக்கணித்ததாக விமர்சித்திருக்கிறது. 8 முதல் 10% விபத்துகளை மட்டுமே CRS விசாரிக்கிறது என்றும் குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால் CRS ஏன் பலப்படுத்தப்படவில்லை?
=> சமீபத்திய CAG தணிக்கை அறிக்கையின்படி, 2017-18 மற்றும் 2020-21-ம் ஆண்டுக்கிடையில், 10 ரயில் விபத்துகளில் கிட்டத்தட்ட 7 ரயில் விபத்துகள் தடம் புரண்டதன் காரணமாக நிகழ்ந்திருக்கின்றன.
=> CAG-ன்படி, ராஷ்ட்ரிய ரயில் சன்ரக்ஷா கோஷ் (RRSK)-ல் ஒவ்வோர் ஆண்டும் ரூ.20,000 கோடி, பாதையைப் புதுப்பிக்கும் பணிகளில் செலவிடப்பட வேண்டும். ஆனால், அதில் 79% நிதி ஏன் குறைக்கப்பட்டது? தடம் புதுப்பிக்கும் பணிகளில் ஏன் இவ்வளவு சுணக்கம்?
=> 2022 மார்ச்சில் ரயில்வே அமைச்சரே அதைப் பரிசோதித்து நிரூபித்துக் காட்டினார். பிறகு ஏன் அனைத்து ரயில்களுக்குப் பாதுகாப்புக்காக வழங்காமல் 4% வழித்தடங்களில் மட்டும் 'கவச்' பயன்படுத்தப்படுகிறது?
=> ஒடிசா ரயில் விபத்துக்கான மூல காரணத்தைக் கண்டுபிடித்ததாக கூறும் இரயில்வே அமைச்சர், சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரைத்துள்ளார். சிபிஐ என்பது குற்றங்களை விசாரிப்பதே தவிர, ரயில் விபத்துகளை அல்ல. தொழில்நுட்ப, நிறுவன மற்றும் அரசியல் தோல்விகளுக்கு சிபிஐ அல்லது வேறு எந்த சட்ட அமலாக்க நிறுவனமும் பொறுப்பேற்க முடியாது." என்று குறிப்பிட்டு அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!