Politics
“மன்னிப்பு... மன்னிப்பு... ஆங்கில அரசுக்காக எதையும் செய்வேன்” : ‘வீர’ சாவர்க்கரின் வீரக்கதை !
‘வீர’ சாவர்க்கர் என இந்துத்வவாதிகளால் அடையாளம் கொள்ளப்படுகிற சாவர்க்கரின் பிறந்த தினம் இன்று. இந்துத்வவாதிகள் ‘வீர’ என முன்னொட்டு சேர்த்து அழைத்துக் கொள்கிற அதேநேரத்தில், அதற்கு நேர்மாறாக, சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் அடிக்கொருதரம் மன்னிப்புக் கேட்டது குறித்த தகவல்களும் உண்டு.
1911ம் வருடம் ‘விசுவாசமிக்க சொற்களால்’ ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார் சாவர்க்கர். அதோடு முடிந்துவிடவில்லை சாவர்க்கரின் மன்னிப்புக் கேட்கும் படலம். அப்போது ஆரம்பித்தவர் அதன் பிறகான 9 ஆண்டுகளில் 6 முறை மன்னிப்புக் கடிதங்களைத் தீட்டியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறைக்குச் சென்றோர், சிறைத் துயராலும், சுதந்திரத் தாகத்தாலும் உடல் எடை குறைந்ததில் அதிசயமில்லை. ஆனால், சாவர்க்கர் அதிசயங்களை எல்லாம் மீறிய அதிசயம்.
அந்தமான் செல்லுலார் சிறைக்குச் சென்றபோது, சாவர்க்கரின் எடை 112 பவுண்டுகள். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது, சில பல மன்னிப்புக் கடிதங்களுக்குப் பிறகு அவரது எடை 126 பவுண்டுகள். எனில், ஒவ்வொரு மன்னிப்புக் கடிதமும் ‘வீர’ சாவர்க்கருக்கு எத்தகைய மகிழ்வைத் தந்திருக்க வேண்டும்?
இதென்ன பிரமாதம்? ஆங்கிலேயரிடம் மாதம் அறுபது ரூபாய் பென்சன் வாங்கியிருக்கிறார் சாவர்க்கர். பிரிட்டிஷாரிடம் இப்படி பென்சன் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர்தானாம். அப்படி அவர் ஆங்கிலேயருக்கு என்ன சேவையாற்றினார் என்பதும் இதுவரை யாரும் அறிந்திராத ரகசியம்.
ஆங்கிலேய அரசுக்கு எதிராக வீராவேசத்தோடு தீவிர வழிகளில் சிலரும், மக்களின் பெரும்படையோடு அஹிம்சை வழிகளில் சிலரும் போராடிய காலத்தில் மன்னிப்புக் கடிதங்களின் மொழியில் பவ்யத்தைக் கூட்டியவர் சாவர்க்கர்.
“ஆங்கில அரசு விரும்பும் எதையும் எந்தச் சூழலிலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்ட வில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கு செல்வேன்” என்பதுதான் So called ‘வீர’ சாவர்க்கர் எழுதிய மன்னிப்புக் கடிதமொன்றின் வரி.
இப்படிப்பட்ட வீர தீர பராக்கிரமங்களைப் புரிந்த சாவர்க்கரைத்தான் ‘சுதந்திரப் போராட்ட தியாகி’ என்கிறார்கள் பா.ஜ.கவினர். சாவர்க்கரை அவர்கள் தூக்கிப் பிடிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இன்றைக்கு பா.ஜ.க அரசு முன்னெடுத்து வருகிற ‘இந்து ராஷ்டிரம்’ கொள்கையை அன்றே பேசிய மதப் பிரிவினைவாத முன்னோடி சாவர்க்கர்.
இந்தியாவின் தனிப்பெரும் அடையாளமான மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத் தன்மைக்கும் இன்றைக்கு பா.ஜ.க அரசால் மிகப்பெரும் ஊறு விளைந்திருக்கிறதென்றால், அவற்றிற்கெல்லாம் மூலம் சாவர்க்கர் போன்ற இந்துத்வ சக்திகள் ஊட்டிய பிரிவினைக் கொள்கைவாதம் தான். இந்தியாவை இந்துத்வ மயமாக்கும் சாவர்க்கரின் எண்ணத்தைத் தான் இன்றைக்கு சி.ஏ.ஏ, என்.ஆர்.சி என பல்வேறு வகைகளில் புகுத்தி வருகிறது பா.ஜ.க.
மதச் சிந்தனையை வலுப்படுத்த, அதன் அடியில் கிடக்கும் சாதி வேர்களையும் நீவிவிட்டு வளர்ப்பதை ஊக்குவித்தார் சாவர்க்கர். சுருக்கமாகச் சொன்னால், இந்திய நாட்டின் கேடுகளாக எவற்றையெல்லாம் நாம் பட்டியலிடுகிறோமோ அவற்றையெல்லாம் ஆதரித்த மனிதராகத்தான் இருந்திருக்கிறார் சாவர்க்கர்.
ஆனால், சாவர்க்கரை பிதாமகனாகச் சித்தரிக்கும் ஏராளமான கட்டுக்கதைகள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. எல்லாவற்றிலும் உச்சமாக தனது வீர சாகச வரலாற்றையும் ‘சித்திரபுத்திரன்’ என்கிற புனைபெயரில் தானே எழுதிக்கொண்டார் அந்த மகான்.
சாவர்க்கர் வீரத்திற்குப் பெயர்போனவரல்ல; மன்னிப்புக் கேட்பதற்குத்தான். தாய்நாட்டின் மீதான பற்றின்றி “ஆங்கில அரசுக்காக எதையும் செய்வேன்” என வெட்கமின்றிச் சொன்னவரின் பெயரைச் சொல்லித்தான் இன்று தேசபக்தி கோஷம் போடுகிறார்கள் பா.ஜ.கவினர்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!