Politics

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வேண்டும், அவர்களின் குரல் அரசுக்கு கேட்க வேண்டும் -காங். வலியுறுத்தல் !

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு அமைத்தும் 3 மாதங்கள் ஆகியும் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் போராட்டத்திற்குக் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.இதனால் இவர்கள் போராட்டத்தை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. இதற்கிடையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பிரிஜ் பிரிஜ் பூஷன் சிங் மீது புகார் கொடுத்த 7 வீராங்கனைகளிடம் போலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதில், ”2016, 2018ம் ஆண்டு போட்டிகளின் போது பிரிஜ் பூஷன் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்" என வீராங்கனைகள் கூறியுள்ளனர். ஆனால் பாஜக எம்.பியை பாதுகாக்க ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், "மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். கடந்த 26-27 நாள்களாக விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் நமது வீரர், வீராங்கனைகள் மிகுந்த வலியில் இருக்கின்றனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு அவர்கள் போராடி வருகின்றனர். அவர்களது குரல் அரசுக்கு கேட்கப்பட வேண்டும். மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் நமது நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

Also Read: டெஸ்ட் சாம்பியன்ஷிப் : "இந்திய அணியில் அவர் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது" -பாண்டிங் கூறிய அந்த வீரர் யார் ?