Politics

குடும்பங்களின் வேதனையில் அரசியல் நடத்த எண்ணாதீர்: எடப்பாடி பழனிசாமி, வானதி சீனிவாசனுக்கு சிலந்தி கண்டனம்!

'கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்டோர் சாவுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று எடப்பாடி பழனிச் சாமி கூறியுள்ளார்! பி.ஜே.பி. வானதி சீனிவாசன். 'தி.மு.க. அரசும் போலிசும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்' என்றுள்ளார்!

நாட்டில் நடந்துவிட்ட ஒரு சோகச் சம்பவத்தை வைத்து அதற்காக வருந்தாமல். சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறாமல், அதிலே இவர்கள் அரசியல் நடத்த நினைக்கும் வேளையில் தமிழ்நாட்டு முதல்வர். சோகத்தில் வாடும் அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் வழங்கிடஓடோடிச் சென்று அவர்களைச் சந்தித்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்ததோடு மட்டுமின்றி. இந்தக் கொடும் இழப்புக்குக் காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க அடுத்தடுத்த உத்தரவுகள் பறக்கின்றன! சி.பி.சி. ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வர் வாக்கு கேட்க மட்டும் மக்களிடம் செல்லவில்லை. எப்போதும் அவர்கள் துயரோடு தன்னை இணைத்துக் கொள்கிறார்... அவர்களது சுக துக்கங்களில் பங்கேற்கிறார்.மேலும் இது போன்ற துயரங்கள் தொடராமல் இருக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவு ‘கட்டை’என்றுதான் எண்ணினோம்; நினைவாற்றலிலும் அவர் சூன்யம்தான் என்பதை அவரே பறைசாற்றிக் கொண்டுள்ளார். என்னவோ தமிழ்நாட்டில் இன்றைய தி.மு.கழக ஆட்சியில்தான் கள்ளச்சாராய சாவு நடந்துவிட்டது போல பேசும் எடப்பாடி. அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். தவழ்ந்துபோய் காலில் எல்லாம் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றும் இருந்தவர்!

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாட்சாத் அம்மையார் ஜெயலலிதா தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த காலத்தில். பண்ருட்டியில் கள்ளச் சாராயத்துக்கு 52 பேர் பலியாகினர். 200 க்கு மேற்பட்டோர் வாழ்க்கையோடு போராடினர். 30க்கு மேற்பட்டோர் தங்களது கண்பார்வையைப் பறிகொடுத்தனர். ஆரம்பகட்டச் செய்தியில் 52 பேர் பலியான தாகக் கூறப்பட்டது. பின்னர் சாவு எண்ணிக்கை அதிகரித்ததே...

அப்போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? அப்போது எடப்பாடி; அம்மையார் ராஜினாமா செய்யா ததைக் கண்டித்தாரா?

இந்த நிகழ்வு நடந்தது 2001 டிசம்பர் மாதம் என்றால் அதே ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் இறந்ததாகச் செய்தி வந்தபின்னும், அதே ஆண்டு அக்டோபர் முதல் வாரம் சென்னை ரெட்ஹில்ஸ் அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் 30 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிர் நீத்த தகவல்கள் வந்தபின்னும் ஜெயலலிதா அரசு தூங்கியதால் இந்தச் சம்பவங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்கதை களாக உருவெடுத்த போதெல்லாம் எடப்பாடி எங்கே மேயப் போயிருந்தார்?

திருமதி வானதி சீனிவாசன் கொஞ்சம் தெளிவுள்ள அரசியல்வாதி என எண்ணியிருந்தோம்: அப்படி எல்லாம் என்னைப் பற்றி தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள் எனச் சொல்லாமல் சொல்கிறார். தமிழ்நாட்டில் இப்போது நடந்து விட்ட சம்பவம், நடந்திருக்கக் கூடாது தான்; அது மேலும் பரவாது நடக்க உடனடி நடவடிக்கைகள் அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

அம்மையாரின் பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலமும் கள்ளச் சாராய சாவுகளுக்கு விதி விலக்கல்ல: சமீபத்தில் குஜராத்தின் போடாட் மாநிலத்தில் ரோஜிட் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு. 40 பேர் வரை உயிரிழந்தும் 97 பேர் வரை மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செய்திகள் எல்லாம் வந்தனவே! மோடியும், அமித்ஷாவும் ஜனித்த பூமி மட்டுமின்றி. அவர்கள் பல காலம் ஆட்சி புரிந்தது மட்டுமின்றி இப்போதும் அவர்கள் மேற்பார்வையிலான ஆட்சிதானே அங்கு நடைபெறுகிறது.

குஜராத் அரசும். மோடியும், அமித் ஷாவும்தான் குஜராத்தில் நடந்த அந்த 40 பேர் சாவுக்குப் பொறுப் பேற்க வேண்டும் என்று அன்று அறிக்கை விட்டாரா அம்மையார்?

இந்தியாவில் அதாவது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆளுகின்ற இந்தியாவில் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆண்டுவரை ஏறத்தாழ 6000 பேர் கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியுள்ளனர்.

இந்தத் தகவல் 2022 ஜூலை 19 ஆம் தேதி வெளியான மக்களவையின் தகவலில் வெளி வந்த விபரம். இது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பி.ஜே.பி. ஆளும் பல மாநிலங்கள் உட்பட நடந்த கள்ளச் சாராய சாவுகளின் மொத்த எண்ணிக்கை!

இந்த கள்ளச் சாராயச் சாவு களுக்கு பிரதமர், உள்துறை அமைச்சர், பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று வானதி கூறுவாரா?

அம்மையார் அரைக்கால் வேக் காட்டு அரசியல்வாதி அண்ணா மலை போல அவசரப்பட்டு அறிக்கை விடுவதை இனியாவது நிறுத்திக்கொள்வது நலம்!

நடந்துவிட்ட துயரச் சம்பவம் எதிர் பாராமல் நடந்துவிட்டாலும், இது நடக்கக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் எடுத்துள்ளது மட்டுமின்றி, துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பங்களுக்கு உடனடியாக தானே நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

முதல்வரைப் பாராட்ட வேண்டாம்; ஆற்றாது ஆழும் அந்த குடும்பங்களின் வேதனையில் அரசியல் நடத்தி ஆதாயம் தேடும் போக்கினை நிறுத்திக் கொள்ளுங்கள்.

- சிலந்தி.

Also Read: இந்தியாவின் அரசியலை தீர்மானிக்க வழிகாட்டியது கர்நாடகா.. பிளாப் ஆனது மோடி கூட்டத்தின் ரோடு ஷோ : முரசொலி!