Politics

வெறும் 40 ஓட்டுக்களை வாங்கி நோட்டாவிடம் தோற்ற பாஜக.. மேகாலய சட்டமன்ற இடைத்தேர்தலில் சம்பவம் செய்த மக்கள்!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதிஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி (நேற்று) இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதனிடையே மேகாலயா மாநிலம் சோகியாங் தொகுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக வெறும் 40 ஓட்டுக்களை மட்டுமே வாங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 60 தொகுதிகளுக்கு நடைபெற்ற மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஐக்கிய ஜனநாயக கட்சி 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. இது தவிரவாய்ஸ் ஆஃப் தி பீப்பிள் பார்ட்டி நான்கு இடங்களையும் திரிணமூல் காங்கிரஸ் 5 இடங்களையும் பா.ஜ.க 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கான்ராட் சங்மா தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் தற்போது மேகாலயா மாநிலம் சோகியாங் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர் HDR லிங்டோ என்பவர் இறந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் எதிர்கட்சியான ஐக்கிய ஜனநாயக கட்சி 16679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி 13257 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. அதே நேரம் இந்த தேர்தலை தனித்து சந்தித்த பாஜக வெறும் 40 ஓட்டுகளை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் 272 வாக்குகள் கிடைத்த நிலையில் இந்தியாவை ஆளும் கட்சியான பாஜகவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: உ.பி : ராமர் கோயில் கட்டப்படும் வார்டில் வென்ற இஸ்லாமியர். 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்ட பாஜக வேட்பாளர் !