Politics

பாஜகவுக்கு ஓட்டு போடுங்க.. வாக்களிக்க வருவோரிடம் வற்புறுத்திய தேர்தல் அலுவலர்.. கர்நாடகாவில் பரபரப்பு !

கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என பெரும்பாலான ஊடகங்கள் கூறியுள்ள நிலையில், ஏராளமான பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டினர். பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பாஜகவை எப்படியாவது வெல்ல வைக்க வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் கோவத்தில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் எல்லாத்துறையிலும் ஊழல் நடந்துள்ளது. மேலும் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பா.ஜ.க ஆட்சியின் 40% ஊழல் ஆட்சி என்பதைதான் முக்கிய ஆயுதமாக எடுத்தனர்.

priyank kharge

இந்த நிலையில், அங்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், அங்கு வாக்களிக்க வருவோர் பாஜகவுக்கு வாக்கு செலுத்துமாறு தேர்தல் அலுவலரே கூறியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. கல்புர்கி மாவட்டம் சித்தாபுரா தொகுதியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இங்கு காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க பாஜக முழு முயற்சியோடு வேலை செய்து வருகிறது. இன்று அங்கு தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்குச்சாவடி எண் 178க்கு வரும் வாக்காளர்களிடம் பாஜகவுக்கு ஓட்டு போடுமாறு தேர்தல் அலுவலர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் புகார் அளித்த நிலையில், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இஸ்லாமிய மதத்தை விமர்சிக்க கூடாதா? மோடி ஆட்சியில் வளர்த்துவிடப்படும் இஸ்லாமோஃபோபியா? : சிறப்புக் கட்டுரை!