Politics
ராகுல்காந்திக்கு தண்டணை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்குவதில் ஏன் அவசரம் ? -உச்சநீதிமன்றம் கேள்வி !
இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் , கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நிரவ் மோடி, லலித் மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என பேசினார்.
இதையடுத்து மோடி என்ற குடும்ப பெயர் வைத்துள்ளவர்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என கூறி குஜராத் முன்னாள் பாஜக அமைச்சர் புர்னேஷ் மோடி என்பவர் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அனுமதியும் ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெறவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி கடந்த மாதம் (மார்ச்) 24-ம் தேதி ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்குக் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம்., உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போரட்டங்கள் நடத்தினர். அதோடு இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என கண்டனங்கள் தெரிவித்தனர். அதோடு இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய விசாரணை நீதிபதிக்கு மாவட்ட நீதிபதியாகப் பதவி உயர்வு வழங்கி குஜராத் அரசு உத்தரவிட்டது. இவருடன் சேர்த்து மேலும் 67 பேருக்கும் குஜராத் உயர்நீதிமன்ற பரிந்துரை அடிப்படையில், பதவி உயர்வு வழங்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டணை வழங்கிய நீதிபதி உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்குவதில் ஏன் இவ்வளவு அவசரம்? ஏன் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை? குஜராத் அரசும், உயர் நீதிமன்றமும்தான் இந்த குளறுபடிகளுக்கு காரணம். இந்த பதவி உயர்வு உத்தரவுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!