Politics

“மோடி பிரதமராக இருக்க காங்கிரஸ்தான் காரணம்..” - பிரச்சாரத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு !

கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கிருக்கும் ஆளுங்கட்சி பாஜக, எதிர்க்கட்சி காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறது. 224 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால் போட்டியிடும் கட்சியினர் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பாஜக சார்பாக பிரதமர் மோடியும் பிரச்சாரத்துக்கு சென்றார். அதேபோல் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் கூட பாஜக MLA -வான ஜெகதீஷ் ஷெட்டர், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அதோடு பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் மனைவியும் காங்கிரஸில் இணைத்துள்ளதோடு, கணவன் - மனைவி சேர்ந்து காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

தேர்தல் நடக்க இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி காங்கிரஸ் சார்பில் ஷிமோகா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடி தற்போது பிரதமராக இருப்பதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தன்னை மற்றவர்கள் திட்டுவதை மோடி எவ்வாறு எண்ணுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் உள்ளிட்டவர்களை மோடி எத்தனை முறை வார்த்தைகளால் திட்டியுள்ளார் என்பது பற்றிய உண்மையான தகவல்கள் என்னிடம் உள்ளன. மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காகவே மோடி இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே தலித் மக்களை பயன்படுத்துகிறார்கள். தலித் வீட்டில் சாப்பிடுவதை ஊடகங்களில் வெளியிட வேண்டுமா? அவர்கள் மனிதர்கள் இல்லையா?. அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்தது என்ற மோடியின் பேச்சு முற்றிலும் தவறானது. அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணியை காங்கிரஸ்தான் அம்பேத்கரிடம் கொடுத்தது.

சமீப நாட்களாக, அம்பேத்கர் ஜெயந்தியின் போது, பா.ஜ.க தலைவர்கள், அலுவலகங்களில், அம்பேத்கரின் புகைப்படங்களை வைத்துள்ளனர். ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் அம்பேத்கரின் புகைப்படம் இல்லாவிட்டாலும், அம்பேத்கரின் பெயரை பாஜக பயன்படுத்தி வாக்குக் கேட்கிறது. நீங்கள் வணங்காத அம்பேத்கரின் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?.

1947 முதல் 2014 வரை நாட்டில் 70% படித்தவர்கள் இருந்த நிலையில், சுதந்திரத்திற்கு முன்பு 100 பேருக்கு 16 பேர் படித்தவர்கள் என்று கூறி, நாட்டிற்கு கல்வி அளிப்பதில் காங்கிரஸின் முக்கிய பங்கு உள்ளது. படித்தவர்களில் மோடியும், ஷாவும் உள்ளனர். இன்னும், காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறார்கள். நாங்கள் உங்களுக்கு கல்வி கற்பித்தோம். ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாத்து வருகிறோம். அதன் காரணமாகவே மோடி பிரதமரானார். எனவே, நீங்கள் காங்கிரஸை வணங்க வேண்டும்” என்றார்.

Also Read: காந்தியை கோட்சே சுடாமல் இருந்திருந்தால்: இந்துத்வா நிர்வாகி திமிர் பேச்சு; வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு!