Politics

தேர்தல் நெருங்க நெருங்க பெருகும் ஆதரவு.. கர்நாடகாவில் பெரும்பான்மையோடு ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ் !

கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது தவிர முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து விலகுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில் தற்போது அது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை அளித்து வருகிறது.

இது தவிர தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 3 மாதத்துக்கு முன்னர் வந்த தேர்தல் கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றாலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளிவரும் கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்தோடு வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது ஏபிபி சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்தோடு வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. கருத்து கணிப்பு முடிவுகளில் படி, மொத்தமுள்ள 224 இடங்களில் பாஜக 74 முதல் 86 இடங்கள் வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் 107 முதல் 119 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 23 முதல் 35 இடங்களில் வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் அதிகபட்சமாக 40% வாக்குகளை பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜக 35% வாக்குகளை மட்டுமே பெரும் என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 17% வாக்குகளை பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also Read: ”போராடும் இடத்தில் மின்சாரமும், தண்ணீர் வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது” - மல்யுத்த வீரர் குற்றச்சாட்டு !