Politics
"உண்மையைப் பேசுவதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார்" -அரசு பங்களாவை காலிசெய்த ராகுல் காந்தி பேட்டி !
இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் , கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நிரவ் மோடி, லலித் மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என பேசினார்.
இதையடுத்து மோடி என்ற குடும்ப பெயர் வைத்துள்ளவர்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என கூறி குஜராத் முன்னாள் பாஜக அமைச்சர் புர்னேஷ் மோடி என்பவர் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அனுமதியும் ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெறவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி கடந்த மாதம் (மார்ச்) 24-ம் தேதி ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்குக் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம்., உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போரட்டங்கள் நடத்தினர். அதோடு இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் தற்போது மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.தொடர்ந்து ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே ராகுல் காந்தி டெல்லியில் வசிக்கும் தனது அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என உத்தரவு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி டெல்லியில் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அரசு பங்களாவை காலி செய்ய தயார் என மக்களவை செயலகத்துக்கு கடிதம் அனுப்பினார். மேலும் இன்று பங்களாவை காலி செய்து அதன் சாவியை மக்களவைச் செயலகத்திடம் ஒப்படைத்தார்.
அதன்பின்னர் இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி "இந்த வீடு எனக்கு இந்திய மக்களால் வழங்கப்பட்டது. என்னிடமிருந்து பறிக்கப்பட்டாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில் உண்மையைப் பேசுவதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் 10, ஜன்பத்தில் சிறிது காலம் தங்கிவிட்டு வேறு வழியைக் கண்டுபிடிப்பேன்" என்று கூறினார். மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ''இந்த நாடு ராகுல் காந்தியின் வீடு. நாட்டு மக்களின் இதயங்களில் ராகுல் குடியிருக்கிறார். மக்களுடனான அவரது உறவை யாராலும் பிரிக்க முடியாது" எனக் கூறப்பட்டிருந்தது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!