Politics

“பாஜகவில் இருந்தால் மரியாதை இல்லை..”-அதிரடியாக விலகிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர்: காங்கிரஸில் இணைந்தார்

ஒன்றியத்தில் பாஜக ஆட்சி வந்த பிறகு பல்வேறு குற்றங்கள் அதிகரித்தே காணப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலை சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னும் அதிகரித்திருக்கிறது. பாசிச சிந்தனையோடு ஒவ்வொரு விஷயத்தையும் செய்யும் பாஜக, மக்களுக்கு தினந்தோறும் ஏதுனும் இன்னல்களை கொடுக்கிறது.

கேஸ், பெட்ரோல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல வழிகளில் இந்திய மக்களுக்கு பாஜக இன்னல்களை கொடுக்கிறது. அதுமட்டுமின்றி மதம் சார்ந்த பிரச்சாரங்களையும், சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு பல இடையூறுகள் கொடுத்து வருகிறது.

பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து பிரச்னை செய்து வரும் அதே வேளையில், பாஜக ஆளும் மாநிலங்களில் ஒடுக்குமுறை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதில் இருந்து எப்படியோ தங்கள் பலத்தை பயன்படுத்தி தப்பித்து விடுகிறது. இதன் விளைவாகவே, பாஜகவுக்கு எங்கள் வீடுகளில் அனுமதி இல்லை என்று மக்கள் தங்கள் வீட்டு வாசலில் எழுதி வைத்தார்கள்.

மேலும் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல விஷயங்களை செய்து வருகிறது பாஜக. கடந்த ஆண்டு கூட மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரக்கூடாது என்று தடை விதித்தது. இதுபோன்று பல இன்னல்களை செய்து வரும் நிலையில், பாஜகவில் இருக்கும் தலைவர்கள் அவரது குடும்பங்களுக்கே வெளியில் மக்களிடம் மரியாதை இல்லை.

இதனால் சில முக்கிய பாஜக நிர்வாகிகள் அதில் இருந்து விலகி வருகின்றனர். அண்மையில் கூட தமிழ்நாட்டில் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் நிறைய பேர் அதில் இருந்து விலகினர். இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கர்நாடகாவில் பாஜா எம்.எல்.ஏ., ஒருவர் பாஜகவில் இருப்பதால் தனது குடும்பத்துக்கு மரியாதை இல்லை என்று கூறி அதிலிருந்து விலகி காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார்.

கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கிருக்கும் ஆளுங்கட்சி பாஜக, எதிர்க்கட்சி காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், கட்சி வேட்பாளர்களை எந்த கட்சியும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

இந்த சூழலில் பாஜகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளுக்கு போட்டியிட பாஜக தலைமை மறுத்து வருகிறது. குறிப்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சமண் சவதி போன்றோருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை.எனவே அங்கு உட்கட்சி பூசல் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் பாஜகவின் மூத்த தலைவரான ஜெகதீஷ் ஷெட்டர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வான இவரை, முன்னதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்தால் வரவேற்போம் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த சூழலில் அவர் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருப்பதால், அவரை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்துக்கும் மக்களிடம் மதிப்பே இல்லை. எனவே அவரது மனைவி, பாஜகவில் இருந்து விலகி விடுமாறு பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் காங்கிரஸில் இணைந்த பின் வீடு திரும்பிய அவரை, அவரது மனைவி ஆனந்தக் கண்ணீரோடு கட்டியணைத்து வரவேற்றார்.

பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றியுள்ளீர்கள், குடும்பம் இனிமேல் தலைநிமிர்ந்து எங்கும் செல்லும் படி செய்துவிட்டீர்கள் என்று கண்ணீரோடு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெகதீஷ் ஷெட்டர் பாஜக சார்பில் வெற்றி பெற்று கடந்த 2012- 2013-ம் ஆண்டுகளில் கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.