Politics
“நான் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் யாரும் நேர்மையானவர் அல்ல..” - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆவேசம் !
டெல்லியில் மதுபான விற்பனைக்கான உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. எனவே இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின்போது டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை விசாரித்து பின்னர் அவரை கைது செய்தது சிபிஐ.
இந்த வழக்கு தற்போது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் டெல்லி முதலமைச்சர் உட்பட முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்காக பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே. சந்திர சேகர ராவின் மகள் கவிதாவிடம் சில வாரங்களுக்கு முன் சிபிஐ விசாரணை நடத்தியது.
இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கில் இன்று நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. மேலும் இந்த முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், இந்த ஊழலை கண்டும் காணாமல் அவர் இருந்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியது. எனவே சிபிஐ-யின் சம்மனை ஏற்று இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜரானார். கேஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
விசாரணைக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், ''சிபிஐ விசாரணையில் ஆஜராகி கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளிப்பேன். வருமான வரித்துறை ஆணையராக நான் இருந்துள்ளேன். நான் நினைத்திருந்தால் எவ்வளவோ பணம் சம்பாதித்திருக்க முடியும். நான் அவ்வாறு நினைக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் யாரும் நேர்மையானவர் அல்ல.
பாஜக அதிகாரம் மிக்கவர்கள். குற்றவாளியா, இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், யாரை வேண்டுமானாலும் அவர்கள் சிறையில் அடைக்க முடியும். நேற்றுமுதல் அவர்கள் அனைவரும் `கெஜ்ரிவாலைக் கைதுசெய்வோம்' எனக் கூறி வருகின்றனர். ஒருவேளை என்னைக் கைதுசெய்ய சிபிஐ-க்கு பாஜக உத்தரவிட்டிருக்கலாம். அப்படி பாஜக உத்தரவிட்டிருந்தால், சிபிஐ அதன்படிதான் நடக்கும்.
என்னைக் கைதுசெய்வதால் அவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள். நாட்டின் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா... எல்லோருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு கிடைத்திடுமா.. ஆனால், உங்களின் (பாஜக) ஈகோவை திருப்திபடுத்திக்கொள்ள முடியும். நான் எனது நாட்டை, பாரத மாதாவை நேசிக்கிறேன். நாட்டிற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !