Politics
“ராஜ்பவன் ஒன்றும் ரவி பவன் அல்ல” -ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு மநீம கண்டனம்!
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என் ரவி சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை பேசி வருகிறார். திருவள்ளுவர் முதல் ஸ்டெர்லைட் போராட்டம் வரை தொடர்ந்து சர்ச்சை கருத்து தெரிவித்து வரும் ஆளுநருக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்தும் தொடர்ச்சியாக பேசி வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு சார்பாக அனுப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இதற்கு பலரும் வலுத்த கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் நேற்றைய முன்தினம் மக்கள் எழுச்சி போராட்டமான தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை காசு கொடுத்து போராட்டம் நடத்தப்பட்டதாக மாணவர்கள் முன் தவறான கருத்துகள் தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் பெரும் கண்டங்கள் தெரிவித்து வரும் நிலையில், ஆளுநரின் போக்குக்கு எதிராக வரும் 12-ம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த சூழலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யும் கட்சியும் ஆளுநரின் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிந்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அந்த கண்டன அறிக்கையில், "மாநிலத்தின் கண்ணியத்திற்குரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களிடையே பேசும்போது அந்த கண்ணியம் பற்றிய கவலை சிறிதுமின்றி பேசியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பலரும் உயிரிழந்த சூழலில், பாதிக்கப்பட்ட மக்கள் பலகாலம் போராடினர். துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த பின்னரே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அப்படிப்பட்ட போராட்டம், வெளிநாட்டு நிதியால்தான் கட்டமைக்கப்பட்டது என்று ஆளுநர் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்ட விதியின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநர், எதிர்க்கட்சியினர் போலப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆளுநர் கூறிய தகவல் உண்மையாக இருக்குமானால், மத்திய உள்துறையிடம் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே? அதைவிடுத்து, மாணவர்கள் மத்தியில் பேசுவது, உண்மைக்கு மாறானதும், அவதூறு என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.
வெளிநாட்டு நிதி தொடர்பாக தான் குறிப்பிட்ட விவரங்களை, தமிழக காவல் துறைக்கோ அல்லது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கோ பகிர்ந்துள்ளாரா என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்.
எதிர்காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் அமரப்போகும் மாணவர்கள் மத்தியில் இப்படிப் பேசுவது, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவோர் குறித்த எதிர்மறைப் பிம்பத்தைக் கட்டமைத்துவிடும். உரிமைகளுக்காகப் போராடும் ஜனநாயக அடிப்படையையே இந்தப் பேச்சு குழிதோண்டி புதைத்துவிடும்.
அரசியல் சாசனப் பொறுப்பில் இருந்துகொண்டு, தனிப்பட்ட முறையில் தனக்குத் தோன்றியதை எல்லாம் பொதுவெளியில் பேசுவதை இனியாவது ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அறவழியில் போராடும் மக்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையிலும், மக்கள் உணர்வுகளை மதிக்காமலும் ஆளுநர் பேசியிருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் இருப்பது ராஜ்பவன், ‘‘ரவி பவன்’’ அல்ல என்பதை ஆளுநர் நினைவில்கொள்ள வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!