Politics

CBSE பாடத்திட்டத்தில் முகலாயர் வரலாறு,RSS தடை,கோட்ஸே குறித்த பாடங்கள் நீக்கம் -சு.வெங்கடேசன் MP கண்டனம் !

வரலாற்றில் ஒவ்வொரு பகுதியும் மிகமுக்கியமானது. வரலாற்றில் இருந்தே நாம் நமது கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும். மொழி, வாழ்வியல், கலை போன்றவற்றை அறிந்துகொள்ள வரலாறு முக்கியமானது. அதனால்தான் வரலாறு குறித்த ஆய்வுக்கு அனைவரும் அத்தனை முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவில் முகலாயர் ஆட்சி காலம் மற்றும் டெல்லி சுல்தான்கள் போன்ற மன்னர்களின் ஆட்சி காலம் என்பது மிகமுக்கியமானது. மத்திய கிழக்கு, சீனா, மேற்கு ஆசியா போன்ற பகுதிகளை நாசம் செய்த மங்கோலியர்களின் படையெடுப்பை தடுத்து இந்திய மக்களை காப்பாற்றியவர்கள் டெல்லி சுல்தான்கள்தான்.

இது தவிர பாரசீக கலைகளை அறிமுகப்படுத்தி கட்டிடத்துறையிலும் பெரும் சாதனையை படைத்தவர்கள் இஸ்லாமியர் மன்னர்கள். அதிலும் முகலாயர் ஆட்சி காலம் இந்தியாவின் பொற்காலம் என்று சொல்லும் அளவு 200 ஆண்டுகாலம் இந்தியாவின் பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவற்றில் தாக்கத்தை செலுத்தியது. முகலாயரின் வரலாற்றை படிக்காமல் நவீன இந்தியாவை கண்டறியவே முடியாது. அந்த அளவு முகலாயர் ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் முக்கியமானது.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்றும், அவ்ர்களின் அடையாளத்தை அளிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முக்கிய நகரங்கள் மற்றும் தெருக்களில் இருந்து முகலாய பெயர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக முகலாயர் குறித்த பாடம் CBSE 12-ம் வகுப்பு வரலாற்று பாட புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சோஷியலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் காங்கிரஸின் ஆட்சி குறித்த பாடங்களும் நீக்கப்பட்டுள்ளது. அதோடு காந்தி குறித்த பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தடை குறித்தும், கோட்ஸே காந்தியை கொலை செய்த பகுதியும் நீக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பக்கத்தில், "அறிவித்து முகலாயர் பாடம் நீக்கம்.

அறிவிக்காமலேயே காந்தி பாடம் நீக்கம்.

ஏன் கோட்சே சுட்டார் என்பது நீக்கம்.

ஆர்.எஸ்.எஸ் மீது தடை என்பதும் நீக்கம்

என்.சி.இ.ஆர்.டி யே!

உனது நோக்கம் இஸ்லாமிய வெறுப்பு மட்டுமல்ல...

மத நல்லிணக்க வெறுப்பு...

பாட நீக்கம் என்ற பெயரில்

வரலாறு நீக்கம்!" என விமர்சித்துள்ளார்.

Also Read: 3 டிகிரி முடித்தும் ஆங்கிலம் தெரியாமல் காப்பி அடித்த பாஜக முதல்வர்.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !