Politics
"சமூகநீதி,சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் சார்பில் இந்த இணைய வழிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள கழக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அரசியல் நடவடிக்கைகளை விட சமூகநீதி நடவடிக்கைகளில் அதிக அக்கறை கொண்டவர் வில்சன் அவர்கள். அதனால் தான் இதனை அகில இந்தியா முழுமைக்குமான மாநாடாக ஒருங்கிணைத்துள்ளார்.
எல்லைகளால் இணைந்துள்ள இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம். சமூக நீதியானது நம்மை எல்லாம் இணைத்துள்ளது. மாநிலத்தின் முதலமைச்சர்கள் - அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் - மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - முன்னாள் நீதியரசர்கள் - மூத்த வழக்கறிஞர்கள் - இணைந்துள்ளோம். சமூகநீதியைக் காக்கும் கடமையானது நமக்குத் தான் இருக்கிறது.அதனால் தான் இணைந்துள்ளோம்.சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்னை அல்ல. ஒரு சில மாநிலங்களின் பிரச்னையும் அல்ல.
அனைத்து மாநிலங்களின் பிரச்னையாகும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஜாதி - வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்னை ஒன்று தான்.புறக்கணிப்பு.எங்கெல்லாம் புறக்கணிப்பு - ஒதுக்குதல் - தீண்டாமை - அடிமைத்தனம் -அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி.
இந்த சமூகநீதித் தத்துவமும் யார் எந்த நோக்கத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் வெற்றியும் பலனும் இருக்கும்.சமூகரீதியாக -கல்வி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதியாகும்.
சமூகரீதியாகவும் - கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்கள் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் சமூகநீதி வரையறை ஆகும்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340 ஆவது பிரிவில் 'socially and educationally' என்பதுதான் வரையரையாக உள்ளது. அதே சொல் தான் அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது.அதாவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறை ஆகும்.
இந்த திருத்தத்துக்கு காரணமான மாநிலம் அன்றைய சென்னை மாகாணம் ஆகும்.இந்த திருத்தத்துக்கு காரணமான தலைவர்கள் தான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும். ''சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்த சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது'' என்பது தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம் ஆகும். இந்த திருத்தத்துக்குக் காரணம், '' happenings in madras தான்'' என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு.அதனால் தான் சமூகநீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.
.......
'socially and educationally' என்பதில் econamicaly என்பதை வஞ்சமாக சேர்க்கப் பார்க்கிறது பாஜக அரசு.
econamicaly - அதாவது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தந்துவிட்டார்கள் பாஜகவினர்.
பொருளாதாரம் என்பது நிலையான அளவுகோல் அல்ல.
இன்று ஏழையாக இருப்பவர் - நாளை பணக்காரர் ஆகலாம்.
இன்று பணக்காரராக இருப்பர் - நாளையே ஏழை ஆகலாம்.
பணம் இருப்பதையே ஒருவர் மறைக்கலாம்.
எனவே இது சரியான அளவுகோல் அல்ல.
உயர்ஜாதி ஏழைகள் என்று சொல்லி இடஒதுக்கீடு தருகிறது பாஜக அரசு. இது சமூகநீதி அல்ல.
ஏழைகளுக்காக எந்த பொருளாதார உதவியையும் செய்வதை நாங்கள் தடுக்கவில்லை.
அது பொருளாதார நீதியாகுமே தவிர - சமூகநீதியாகாது.
ஏழைகள் என்றால் அனைத்து ஏழைகளும் தானே இருக்க முடியும்? அதில் என்ன உயர்ஜாதி ஏழைகள்?
ஒடுக்கப்பட்ட ஜாதி ஏழைகளை புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா?
அதனால் தான் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் நாங்கள் எதிர்க்கிறோம்.
உயர்ஜாதியில் இருக்கும் ஏழைகளுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவது ஒன்றிய பாஜக அரசின் திட்டமாகும்.இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரைச் சொல்லி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். இதன் வன்மமான எண்ணத்துக்கு அதிகம் விளக்கம் சொல்லத் தேவையில்லை. இடஒதுக்கீடு மூலமாக அனைத்து சமூக மக்களும் படித்துவிடுகிறார்கள் - வேலைக்கு போய்விடுகிறார்கள் என்ற வன்மம் தான் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று சொல்ல வைக்கிறது. 10 சதவிகித இடஒதுக்கீடு தருவதால் தகுதி போகாதா? திறமை போகாதா? 100 ஆண்டுகளுக்கு முன்னால் - 200 ஆண்டுகளுக்கு முன்னால் - உயர்ஜாதியினர் மட்டுமே படிக்கலாம் என்ற காலம் இருந்தது அல்லவா? அதனை உருவாக்க நினைக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும்.
சமூகநீதி என்ற பெயரால் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் செய்யப்பட்ட செயல்களை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
* இசுலாமியர்களுக்கான தனி இடஒதுக்கீடு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவர்களை உயர் ஜாதி ஏழைகள் என்ற பிரிவில் சேர்த்துள்ளார்கள்.
* இசுலாமியர்களிடம் இருந்து பறித்து வேறு இரண்டு சமூகத்துக்கு பிரித்துக் கொடுத்து இசுலாமியர்களுக்கும் அந்த சமூகத்துக்கும் மோதலை உருவாக்கி இருக்கிறார்கள்.
* அதே போல பட்டியலின மக்களுக்குக்குள் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.
நடக்க இருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இதனை செய்துள்ளார்கள்.
பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் -
வாக்களிக்காதவர்கள் என்று நினைத்து இந்த பாகுபாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிப்படையாகவே சமூகநீதி கொலை செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில்.
* பட்டியலின மக்களின் இடஒதுகீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
* பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
* சிறுபான்மையினர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
* பட்டியலின மக்களின் இடஒதுகீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
* பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
* சிறுபான்மையினர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
இவற்றை அகில இந்திய ரீதியில் கண்காணிக்க வேண்டும்.
மாநில அளவிலும் கண்காணிக்க வேண்டும்.
சமூகரீதியாகவும் கண்காணிக்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தது.சமூகநீதி ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது. இக்கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும்.
இக்கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும்.
வழிகாட்டும். செயல்படுத்தும். இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும். அந்த வகையில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது போல அனைத்து மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதனை அனைத்து மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியா முழுமைக்கும்
* கூட்டாட்சியை
* மாநில சுயாட்சியை
* மதச்சார்பின்மையை
* சமத்துவத்தை
* சகோதரத்துவத்தை
* சமதர்மத்தை
* சமூகநீதியை - நிலைநாட்ட நாம் குரல் கொடுத்தாக வேண்டும். அது வெறும் குரலாக மட்டும் இருக்க முடியாது. தனித்தனி குரலாக மட்டும் இருந்தால் பயனில்லை. கூட்டுக் குரலாக - கூட்டணிக் குரலாக அமைய வேண்டும்.
தந்தை பெரியார்,அம்பேத்கர்,ஜோதிராவ் பூலே பெயரில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் படிப்பு வட்டம் தொடங்கி இளைய சமுதாயத்துக்கு சமூகநீதியை கற்றுத்தர வேண்டும். எத்தகைய உன்னதமான தத்துவமாக இருந்தாலும் அது வெற்றி பெறுவதற்கு - அந்த தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சக்திகளின் ஒற்றுமை என்பது மிகமிக அவசியம். அத்தகைய ஒற்றுமை ஒரிரு மாநிலத்தில் மட்டும் உருவானால் போதாது. அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும். அது அகில இந்தியா முழுமைக்குமானதாக ஒன்றாதல் வேண்டும். அதற்கு இது போன்ற கூட்டமைப்புகள் அடித்தளம் அமைக்கும்.சமூகநீதி இந்தியாவை உருவாக்க -சமதர்ம இந்தியாவை உருவாக்க -சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.நன்றி வணக்கம்! " என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!