Politics

"மு.க.ஸ்டாலின் பின்னே நாம் ஒருங்கிணைய வேண்டும்" -தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டி தள்ளிய தேசிய தலைவர்கள் !

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் நேரிலும் காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா "பெரியாரும், கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார். தேசத்தின் நன்மைக்காக அவரின் பின்னே நாம் ஒருங்கிணைய வேண்டும்" என்று கூறினார்.

பின்னர் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, "சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டையும் ஒன்றிய பாஜக அரசு நீர்த்துப் போக முயற்சி செய்கிறது. நாட்டின் அனைத்து சமுதாயத்தினருக்கும் கல்வி போய்ச் சேர வேண்டும். சமூக நீதிக்கான முன் முயற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான நேரத்தில் முன்னெடுத்துள்ளார். ஸ்டாலினின் முயற்சிக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை அளிக்கும்" என்று கூறினார்.

கூட்டத்தில் பேசிய சிபிஐ பொதுச்செயலர் டி.ராஜா" அனைத்துச் சக்திகளையும் சமூக நீதி கோட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைத்திருக்கிறார். தமிழ்நாடு திருவள்ளுவர் மண், அயோத்தி தாசர் மண். பெரியார் மண், சிங்கார வேலர் மண். அண்ணா மண். கலைஞர் மண். அனைவரும் சுயமரியாதைக்காக போராடியவர்கள். தற்போது அந்த பணியை ஸ்டாலின் தொடர்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காக்க, சமூக நீதியை காக்க முதலமைச்சர்மு.க.ஸ்டாலினின் முயற்சி தேசிய அளவில் வெற்றி பெற முழு ஆதரவு தருவோம்" என்று கூறினார்.

பின்னர் பேசிய சிபிஎம் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி "பெரியார், அண்ணா கலைஞர் வழியில்சமூக நீதி பேராாட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார்" என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

Also Read: சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலில் மரபை மீறி இந்தி தெரிந்த ஓட்டுநர் நியமனம்.. சு.வெங்கடேசன் MP கண்டனம் !