Politics
“அரசு பங்களாவை காலி செய்ய தயார்..” - தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து ராகுல் காந்தி கடிதம் !
இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் , கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நிரவ் மோடி, லலித் மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என பேசியுள்ளார்.
இதையடுத்து மோடி என்ற குடும்ப பெயர் வைத்துள்ளவர்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என கூறி குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி என்பவர் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அனுமதியும் ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெறவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி கட்ந்த 24-ம் தேதி ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்குக் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம்., உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போரட்டங்கள் நடத்தினர். அதோடு இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இரண்டு நாட்களாக நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு ஜனநாயக படுகொலை எனவும் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில் ராகுல் காந்தி டெல்லியில் வசிக்கும் தனது அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என உத்தரவு நோட்டீஸ் நேற்று அனுப்பப்பட்டது. இந்த இந்த நிலையில் ராகுல் காந்தி டெல்லியில் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அரசு பங்களாவை காலி செய்ய தயார் என மக்களவை செயலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “12 துக்ளக் லேனில் உள்ள எனது தங்குமிடத்தை ரத்து செய்து மார்ச் 27, 2023 அன்று அனுப்பிய கடிதத்திற்கு நன்றி. கடந்த 4 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அரசு பங்களாவில் தொடர்ந்து வசித்து வந்துள்ளேன்.
கடந்த காலங்களில் எனக்கு நிறைய நல்ல நினைவுகளை இந்த வீடு அளித்துள்ளது அதற்கு நன்றி. எனது உரிமைகளுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல், உங்கள் கடிதத்தில் உள்ள விவரங்களுக்கு நிச்சயமாக நான் கட்டுப்படுவேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
மக்களே உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் அதி கனமழை பெய்யும்? - பாலச்சந்திரன் எச்சரிக்கை!
-
கன மழை எதிரொலி : உங்கள் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறையா?
-
கனமழை எச்சரிக்கை : பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR செய்தியாளர்களிடம் பேசியது என்ன?
-
கன மழை எச்சரிக்கை : களத்தில் இறங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி : சோகத்தில் மூழ்கிய கிராமம்!