Politics
‘இம்‘ என்றால் சிறைவாசம் ‘ஏன்’ என்றால் வனவாசமா? -ராகுல் காந்தி தகுதி நீக்கத்துக்கு கி.வீரமணி கண்டனம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறாகப் பேசினார் என்று கூறி ஈராண்டு தண்டனை விதித்திருப்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயல் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் :
அவதூறாக ராகுல் காந்தி பேசினார் என்று கூறி இரண்டாண்டு தண்டனையா? கருத்துரிமை எங்கே போகிறது?
‘இம்‘ என்றால் சிறைவாசம் ‘ஏன்’ என்றால் வனவாசமா?
நமது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குவதா?
நம் நாட்டில் நமது அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள நெறிமுறையான ‘ஜனநாயகக் குடியரசு’ (Democratic Republic) என்ற தத்துவம் மக்கள் குரல் வளையை - விமர்சனங்களை - நெரித்து முறிப்பதல்ல.
ஒன்றிய பா.ஜ.க. அரசு - ஜனநாயக உரிமைப் பறிப்பினை பகிரங்கமாகவே செய்து வருகிறது!
நமது அரசமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய பகுதி - அடிப்படை உரிமைகள் என்ற கருத்துச் சுதந்திர உரிமை; அது நமது நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து ஒன்றியத்தை ஆளும் (ஆர்.எஸ்.எஸ்.) அரசு முன்பு நெருக்கடி காலத்தில் சிக்கியது என்பதைக்கூட ஏனோ வசதியாக மறந்துவிட்டு, ஜனநாயக உரிமைப் பறிப்பினை - மறைமுகமாகக்கூட அல்ல பகிரங்கமாகவே செய்து வருகிறது! இதனைச் சுட்டிக்காட்டினால் அவர்கள்மீது திரிசூலங்கள் பாய்கின்றன! சி.பி.அய்., வருமான வரித் துறை, அமலாக்கப் பிரிவு மற்றும் உள்நாட்டில் இவ்வாட்சி வந்தவுடன் கூர்தீட்டப்பட்ட சில சட்டப் பிரிவுகள் எதிர்க்கட்சியினரை குறி வைத்துத் தாக்கி, சீறிப் பாய்கின்றன!
அடக்குமுறை ஏவுகணைகளை குறி வைத்துப் பாயவிடுகின்ற அசாதாரண சூழ்நிலை!
‘இம்’ என்றால் சிறைவாசம்; ‘ஏன்’ என்றால் வனவாசம் என்று அடக்குமுறை ஏவுகணைகளை குறி வைத்துப் பாயவிடுகின்ற அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது, நாட்டின் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கி வருகிறது.கன்னியாகுமரிமுதல் காஷ்மீர்வரை மக்களைச் சந்தித்த எதிர்க்கட்சியின் துடிப்புமிகுந்த இளந்தலைவர் ராகுல் காந்திக்கு அவரது கருத்துரிமையை அவதூறு என்று கூறி, அவருக்கு சூரத் மெட்ரோ பாலிட்டன் நீதிபதிகளால் இரண்டாண்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளும் மாநிலங்களில், கட்சி உடைப்பு - இல்லையேல், ஆளுநர்கள்மூலம் ஒத்துழையாமை அல்லது அவர்களை அரசியல் கருவிகளாக்கி, தடுப்பணைகளாக்கி ஜனநாயகத்தின்மீது தாக்குதல் நடத்துவது பல மாநிலங்களில் காணும் அன்றாட அவலங்கள்!
இவையெல்லாவற்றையும்விட ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு ஜனநாயகத்தில் எவ்வளவு நம்பிக்கை உள்ளது என்ற இலட்சணத்தைக் கண்டறிய ஒரே ஓர் உதாரணம்.
நாடாளுமன்றத்தின் ஒரு முக்கிய அவையான மக்களவை, அடுத்த ஆண்டு அது முடிந்து பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையிலும்கூட - ஏறத்தாழ 4 ஆண்டுகளாக மக்களவைக்குத் துணை சபாநாயகர் (Deputy Speaker) இல்லாமலேயே, இத்தனை ஆண்டுகளாக அது நடந்து வருகிறது! ஏனோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதைக் கண்டும் பரிகாரம் தேடவில்லை! புரியவில்லை!!
விந்தையிலும் விந்தை அல்லவா!
மரபுப்படி அப்பதவியை எதிர்க்கட்சிகளுக்கு - அது ‘ஆஸ்தான’ எதிர்க்கட்சியாகக்கூட (அதாவது ஆளுங்கூட்டணிக் கட்சித் தலைவர்களில் ஒருவராகக்கூட இருக்கலாம்) இருப்பவர்களைக்கூட இதுவரை போடாமலேயே - அதாவது துணை சபாநாயகர் இன்றியே ஓராண்டில் நாடாளுமன்றம் முடிவடையவிருக்கிறது - இது விந்தையிலும் விந்தை அல்லவா!
டில்லி உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி நேற்றுகூட ஓர் அறிக்கையில், ‘‘எங்களது கருத்துரிமைக்காக நாங்கள் ஒன்றிய அரசால் மிரட்டப்படுவதா?’’ என்று கூறியிருக்கிறார்.
உச்சநீதிமன்றத்துடன் மோதல் போக்கு உள்ளதோ என்ற அய்யம் பல நேரங்களில் வெளிச்சத்திற்கு வரும் விரும்பத்தகாத நிலை உள்ளது!
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் (குறள் 448)
அடக்குமுறை, அச்சுறுத்தல்களால் அல்ல!
எதிர்க்கட்சிகளின் கருத்தை, தமது தக்க பதிலடிகளால்தான் ஆளுங்கட்சி எதிர்கொள்ளவேண்டுமே தவிர, அடக்குமுறை, அச்சுறுத்தல்களால் அல்ல!
இது அரசியல் அரிச்சுவடி தரும் பாடம்!
நாடாளுமன்றத்தின் வரலாற்றில் முக்கிய விவாதக் களத்தோடு கூடி, ஆரோக்கிய ஜனநாயகத்தை அகிலத்திற்குக் காட்டுவது - பட்ஜெட் தொடர் விவாதத்தின்மூலம்தான்!
ஜனநாயக வரலாற்றில் பெருமையளிப்பதாக ஒருபோதும் இருக்காதே!
ஆனால், தொடர்ந்து முடக்கப்பட்டு, வழமைபோல முன்கூட்டியே முடிக்கப்படவிருக்கிறது!
விவாதம் இல்லாமலேயே வெறும் குரல் வாக்கெடுப்புமூலம் ரூ.45 லட்சம் கோடி பட்ஜெட் நிறைவேறுவது ஆளும் கட்சிக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம்; ஜனநாயக வரலாற்றில் அது பெருமையளிப்பதாக ஒருபோதும் இருக்காதே!
ஆளும் கட்சிதான் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமலும், எதிர்க்கட்சிகள் கருத்தை, விளக்கத்தை கூறத் தயார் என்று கூறியபோதிலும்கூட, அதை ஏற்க மறுப்பதும் வீண் பிடிவாதம் அல்லவா?
இதே மோடி வெளிநாடுகளில் என்னென்னவெல்லாம் பேசினார் என்பது நாடறிந்த ஒன்றல்லவா!
ராகுல் காந்தி பேசிய பேச்சுதான் இந்த நாடாளுமன்ற முடக்கத்திற்கு முக்கிய காரணம் என்று சாக்குக் கூறப்படுகிறது.உண்மையில் ஆளுங்கட்சி நல்ல விவாதத்தில், எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு, ஆதாரங்களை அடுக்கி தவிடு பொடியாக்கிடட்டுமே!
அதுபற்றிய பதிவுகளே கூடாது என்பதுதான் காரணமா - புரியவில்லை?
‘‘உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது.’’
தூக்கில் போடும் குற்றவாளிக்குக்கூட உரிய வாய்ப்புத் தரத்தான் சட்டம் சொல்லுகிறது. வாயடைப்பு அல்ல! பதில் என்பதை ஜனநாயகத்தின்மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் உணராது, அந்த வாயிலை அடைத்தால், அத்தகைய முயற்சியில் ஈடுபடுபவர்களின் பழைய வரலாற்றை சற்றுப் புரட்டிப் பார்த்தால், சரியான பாடங்களாக கிடைக்கும்.
காங்கிரஸ் கட்சியினரையும் கடந்து இளைஞர்களை ஊக்கப்படுத்தத்தான் இது உதவும் - அதிகாரப் போதை கண்களை மறைப்பதால், எந்த எல்லைக்கும் சென்றால் என்ன ஆகும் என்பதை வரலாறு கற்றுத்தந்துள்ளது.
சரித்திரம் சிரிக்கும் - கேலியாக...!
ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனை, அவரது வளர்ச்சிக்கு மேலும் எருவிட்டதாகுமே தவிர, தடுப்புச் சுவராக ஒருபோதும் ஆகாது என்ற பாடத்தை மறந்தால், சரித்திரம் சிரிக்கும் - கேலியாக, புரிந்துகொள்ளுங்கள்! "என்று கூறியுள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!