Politics
”சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு” : திமுக MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் மூலம் நாடுமுழுவதும் பலர் தற்கொலை செய்துகொண்ட அவல நிலை நீடித்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்போதிருந்த அ.தி.மு.க அரசு அவசரக் கோலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றியது.
பின்னர் உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் சுட்டி அச்சட்டத்தை செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்து விட்டது. இதனையடுத்து சரியான சட்ட விதிகளுடன் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மீண்டும் வலுவான முறையில் இயற்றிட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் கொண்டு ஓர் ஆய்வுக் குழுவை நியமித்து, அவரது கருத்துரை - பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, அவசரச் சட்டம் (ordinance) இயற்றப்பட்டது.
பிறகு, தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் தடைக்கான தனி மசோதாவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கடந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாவை 4 மாதம் 11 நாட்களுக்கு பின்னர் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து மீண்டும் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஒன்றிய அமைச்சர் அனுராஜ் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தி.மு.க உறுப்பினர் பார்த்திபன் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராஜ் சிங் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில், "பந்தயம் மற்றும் சூதாட்டம் இரண்டும் இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் வருகிறது. ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
மேலும், ஆன்லைன் சூதாட்டங்களை சமாளிக்கவும் அதனை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்றி உள்ளன" என எழுத்துப்பூர்வ விளக்கத்தில் ஒன்றிய அமைச்சர் அனுராஜ் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!