Politics

வடமாநிலங்களில் தமிழ்நாடு குறித்து அவதூறு பரப்பும் பாஜக.. பீகார் தொழிலாளர்களை முன்வைத்து பரவும் வதந்தி !

தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில நாட்களாக வதந்தி பரவிவருகிறது. அதிலும் குறிப்பாக திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களை சிலர் திட்டமிட்டு தாக்குவதாகவும், சிலரை கொலைசெய்ததாகவும் வீடியோ ஒன்று வைரலானது.

இந்த வீடியோ பரவி சில நேரத்திலேயே பாஜகவினர் இந்த வீடியோகளை திட்டமிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பினர். அதிலும் அவர்கள் ஹிந்தி பேசிய காரணத்தால்தான் தாக்கப்பட்டதாக வடமாநில பாஜகவினர் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் வீடியோவை பரப்பி வந்தனர்.

இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில ஹிந்தி ஊடகங்கள் இதனை உண்மை என நம்பி அப்படியே இந்த பொய் தகவலை செய்தியாக வெளியிட்டனர். மேலும், சில பத்திரிகையாளர்களும் இது உண்மை என நம்பி தங்கள் சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக கருத்துக்களை பதிவிட்டனர்.

அந்த வீடியோகளை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் சில பாஜக ஆளும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மற்றொரு வீடியோ ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

மேலும், இதுபோன்ற வீடியோக்கள் பரவும் தகவல் அறிந்ததும் தமிழக காவல்துறை சார்பில் உண்மை நிலை குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பீகார் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இது போன்ற வதந்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் மாநில சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் இந்த வதந்தி வீடியோவை முன்வைத்து பிரச்சனையில் ஈடுபட்டனர். ஆனால் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் "தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, இது போலியானது என்று அறிக்கை அளித்துள்ளார். இரண்டு வீடியோக்களுமே போலியானவை.

பிகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இல்லை என்று காட்டவே இது செய்யப்பட்டுள்ளது. போலியான வதந்திகளை பரப்புவதே பாஜகவின் வேலை. இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் பிகார் அரசும் தமிழ் நாடு அரசும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்" என பதிலடி கொடுத்தார். மேலும், தமிழ்நாடு அமைச்சர் சி.வி.கணேசனும் இதுதொடர்பாக விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் பாஜகவினரால் பரபரப்பட்டு வரும் நிலையில், இரண்டு மாநிலங்களில் பிரச்சனையை உண்டு பண்ணவே இதை செய்கின்றனர் என்பதை உணர முடிகிறது. அதிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியல் குறித்து பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், அவரை மையமாக வைத்து, தமிழ்நாட்டில் பெயரை வடமாநிலங்களில் கெடுக்க பாஜக முயற்சி செய்து வருவதும் தெரியவருகிறது.

ஏற்கனவே வடமாநிலங்களில் பாஜக கலவரம் செய்துவரும் நிலையில், அவர்களை தமிழ்நாட்டில் குடியமர்த்தி அவர்கள் மூலம் இங்கு கலவர சூழலை பாஜக உருவாக்கி வருகிறது என்பதும் இதன்மூலம் உறுதியாகியுள்ளது. இது போன்ற தகவல்கள் வெளியான நிலையில், பலரும் பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.

Also Read: எடப்பாடிக்கு ஏற்பட்ட 8-வது தோல்வி.. RK நகர் முதல் ஈரோடு கிழக்கு வரை.. பட்டியலிட்டு விமர்சித்த முரசொலி !