Politics

அதானிக்கு அடுத்த அடி.. அதானியிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டாம்.. வங்கதேச மின்சார வாரியம் எதிர்ப்பு !

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.ஆனால் அதானி குழும நிறுவனத்தின் வருவாய் மட்டும் கணிசமாக உயர்ந்தது.

இதனிடையே அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு பல லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பங்குச்சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்பு விசாரணையை தொடங்குவதாக அறிவித்து இந்திய ரிசர்வ் வங்கியும் அதானியால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதோடு உச்சநீதிமன்றமும் முன்னாள் நீதிபதி தலைமையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஜார்ஜ் சோரஸ் அதானியின் வீழ்ச்சி இந்திய அரசின் ஆட்சி மாற்றத்திற்கான, ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை திறக்கக்கூடும் எனக் கூறயிருந்தார். அதனைத் தொடர்ந்து கெளதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் மூலம் ரஷியாவைச் சேர்ந்த விடிபி வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக பிரபல போர்ப்ஸ் பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்தியில், துபாய், சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து அதானி குழுமத்துடன் தொடர்புடைய பிற நிறுவனங்களின் வணிகத்தை வினோத் அதானி கவனித்து வருகிறார். இவரின் மறைமுக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சிங்கப்பூரைச் சேர்ந்த வணிகம் மற்றும் முதலீட்டு நிறுவனமான ‘பினாக்கிள்’ மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு ரஷியாவைச் சேர்ந்த விடிபி வங்கியில் வினோத் அதானி கடன் பெற்றுள்ளார்.

இந்த கடன் உக்ரைன் -ரஷ்யா போரின்போது பெறப்பட்டுள்ளது. கடனாகப் பெற்ற 263 மில்லியன் டாலர்களில் 258 மில்லியன் டாலர்களை பெயரிடப்படாத பங்குகளுக்காக ஒதுக்கியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் , ரஷிய வங்கியிலிருந்து பெற்ற கடன் தொகைக்கான உத்தரவாதமாக அதானி நிறுவனத்தின் ஆப்ரோ ஏசியா மற்றும் வேர்ல்ட்வைட் ஆகிய இரு நிறுவனங்களை குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் பிற நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று அதை அதானி குழும பங்குகளில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதானிக்கு அடுத்த அடியாக அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கதேச அரசுக்கு அந்நாட்டு மின்சார மேம்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு அதானி பவர் நிறுவனத்துடன் வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியம் 25 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், சர்வதேச சந்தை விலையை விட அதானி நிறுவனம் அதிக தொகைக்கு நிலக்கரி விற்பனை செய்வதாகவும், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் எழுவதாகவும், இதனால் இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.