Politics
இந்திய ஊடகத்தை தொடர்ந்து மேற்கத்திய ஊடகத்துக்கும் பூட்டுபோட முயற்சி -மோடியை விமர்சித்த காங்கிரஸ் !
குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் சிறுபான்மையினரான இசுலாமியர் மீது நடந்த திட்டமிட்ட தாக்குதலுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. குறிப்பாக இந்த விவகாரத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி நேரடியாக குற்றம்சாட்டப்பட்டார்.
அந்த கலவரம் நடந்து சுமார் 20 வருடங்கள் கடந்த நிலையில், சமீபத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, கடந்த 17-ம் தேதி “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” (India : The Modi Question) என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் இந்த கலவரத்தில் மோடிக்கு இருக்கும் தொடர்பு குறித்தும், அவரின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியும் இந்த வீடியோ இருப்பதாக கூறப்பட்டது.
மேலும் இந்த ஆவணப்படத்தில் குஜராத் கலவரத்தின் போது, சிறுபான்மையினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை எந்த முயற்சியையும் மேற்கொள்ளப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆவணப் படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து பிபிசி வெளியிட்டுள்ள இந்த ஆவணப்படத்திற்கு தடை விதித்துள்ள ஒன்றிய அரசுக்குப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே மோடிக்கு எதிராக ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் இந்திய அலுவலகம் அமைந்திருக்கும் டெல்லியில் வருமானவரித்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. 3 நாட்களாக நடைபெற்று வரும் இந்த சோதனை ஊடகத்துறை மீதான அடக்குமுறையாக உலகளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "மேற்கத்திய அமைப்பின் ஒவ்வொரு மரியாதையையும், பிரதமர் மோடி பிரசாரமாக மாற்றுவார். ஆனால், அதே மேற்கத்திய ஊடகங்களின் சிறு விமர்சனத்தைக்கூட பொறுத்துக்கொள்ள அவரால் முடியாது. கடந்த எட்டு ஆண்டுகளாக இந்திய ஊடகங்களை அவர் தாக்கப்பட்டதைப்போல, தற்போது வெளிநாட்டு ஊடகங்களின் வாய்களும் பூட்டப்பட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சுழற்சி முறையில் ஜி20 அமைப்பின் தலைவர் பதவியைப் பெற்றதிலிருந்து, இந்தியாவை `ஜனநாயகத்தின் தாய்' என்று மோடி அழைக்கிறார். இந்தியா, ஜனநாயகத்தின் தாய் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
ஆனால், ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மக்கள் தெருக்களில் போராடிக்கொண்டிருக்கையில், மோடியின் கருத்தியல் முன்னோர்களான ஆங்கிலேயர்களிடம் கருணை கோரினார்கள்
பத்திரிகைச் சுதந்திர குறியீட்டில் இந்தியா 150-வது இடத்தில் இருக்கிறது. 2014 முதல் இதுவரை 37 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மோடி அரசாங்கத்தால், இந்திய ஊடகங்கள் மீண்டும் மீண்டும் கழுத்து நெரிக்கப்படுகின்றன" என்று காட்டமாக விமர்சித்துள்ளளார் .
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!