Politics

Emergency Door-ஐ திறந்தது பாஜக MP தான்.. ஒப்புக்கொண்ட ஒன்றிய அமைச்சர்..அம்பலமான அண்ணாமலையின் அடுத்த பொய்!

கடந்த டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாஜக தலைவர் அண்ணாமலையும், அக்கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாவும் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அப்போது விமானத்தில் ஏறிய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் விமானம் புறப்படும் நேரத்தில் 'எமர்ஜென்சி' கதவிற்கான பட்டனை அழுத்தி விளையாட்டு காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், பயணிகள் அச்சமடைந்ததோடு மட்டுமின்றி, விமானத்தில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு மீண்டும் விமானத்தை சோதனை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் 3 மணி நேரம் விமானம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு சென்றதாக செய்திகள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும்தேஜஸ்வி சூர்யா ஆகியோர் திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி "2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி" என்று விமர்சித்துள்ளார்.

மேலும், அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தில் எமர்ஜென்சி வழியை திறந்தது இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாதான் என்றும் அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரம் பெரிதான நிலையில் , எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரத்தில் பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா, தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளதாக விமான போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவந்த நிலையில், "தவறுதலாகவே எமர்ஜென்சி கதவை திறந்துள்ளார் என்றும், தனது செயலுக்கு தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரிவிட்டார் என்றும் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "தேஜஸ்வி விமானக் கதவை திறக்கவில்லை, அவர் படித்தவர். விமானத்தின் அவசரக் கதவில் ஒரு இடைவெளி இருந்தது. அதைப் பார்த்து தேஜஸ்விதான் விமானக் குழுவிடம் கூறினார். நானும் இடைவெளி இருப்பதைப் பார்த்தேன். இதையடுத்து பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகள் நடந்தன. தவறு செய்ததாக அவர் மன்னிப்பு கோரவில்லை. அவர் மீது தவறு இல்லாதபோதும், எம்.பி என்ற ஒரு பொறுப்பில் இருப்பதால் அவர் மன்னிப்பு கேட்டார்" என்று கூறியுள்ளார். தேஜஸ்வி யாதவே நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சை சமூக வலைதள வாசிகள் விமர்சித்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மலா ராய் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விமானபோக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் " இண்டர்குளோப் ஏவியேஷன் அளித்த அறிக்கையின் படி, இண்டிகோ நிறுவனத்தின் 6இ-7339 என்ற விமானம் சென்னையிலிருந்து திருச்சி புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணித்த தேஜஸ்வி சூர்யா எதிர்பாராவிதமாக எமர்ஜென்ஸி கதவை திறந்துவிட்டார். அவர் எந்தவித நோக்கத்தோடும் இந்த செயலை செய்யவில்லை. அவர் எந்தவொரு விதியையும் மீறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று இண்டிகோ நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் தேஜஸ்வி சூர்யா எமர்ஜென்ஸி கதவை திறந்தது உண்மை என்றும், இந்த விவகாரத்தில் வழக்கம்போல அண்ணாமலை பொய்கூறியுள்ளார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அண்ணாமலையை குறிப்பிட்டு இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: கிருத்திகா உதயநிதியின் விழிப்புணர்வு ஆல்பம் பாடல் வெளியீடு.. “யார் இந்த பேய்கள்” கூறும் கருத்து என்ன ?