Politics
தனது நண்பரான அதானியை வளர்த்து விட்ட மோடி.. ’சரிகிறதா சாம்ராஜ்யம் ?’ -தினகரன் தலையங்கம் விமர்சனம் !
தினகரன் தலையங்கம் பின்வருமாறு "‘பணம் பத்தும் செய்யும்’ என்பது அதானியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் விவகாரத்தில் உண்மையாகி விட்டது. இந்திய நாட்டையே ஆட்டிப் படைத்து கொண்டிருந்த அதானி குழுமத்தின் வீழ்ச்சி, தற்போது ஒரு ஆய்வறிக்கை மூலம் வெளிப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹின்டன்பார்க், கடந்த 2 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில், அதானி குழுமம் பங்குச்சந்தையில் பல்வேறு மோசடிகளை செய்துள்ளதாகவும், அதன் மூலம் சுமார் ரூ.18 லட்சம் கோடி முறைகேடாக சம்பாதித்து உள்ளதாகவும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இதன் விளைவாக கடந்த புதன்கிழமை தொடங்கிய அதானியின் சரிவு, இப்போது அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது வரை நீண்டு கொண்டிருக்கிறது.
வாழ்க்கை ஒரு சக்கரம் என்ற வறட்டு மொழியைக் கொண்டே அதானியின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் எடை போட வேண்டியதுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு 1988ம் ஆண்டில் கவுதம் அதானி என்பவரால், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு பிரதமர் மோடியே பிள்ளையார் சுழி போட்டார். கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, தனது ஆத்ம நண்பரான அதானியை, ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின்போதும் உடன் அழைத்துச் சென்றார். 2019ல் ஆஸ்திரேலியா சென்ற போது, அதானியை அழைத்துச் சென்று, அங்குள்ள குயின்ஸ்லாந்தில் 12.3 பில்லியன் அமெரிக்க டாலர்களில் மேற்கொள்ளப்பட இருந்த பெரிய திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ ஆரம்பத்தை பெற்று தந்தார். இதற்கு இந்தியாவில் உள்ள வங்கிகள் பிணை வழங்கியது சர்ச்சைக்குள்ளானது.
தொடர்ந்து இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை அதானி குழுமத்தின் முழுக் கட்டுப்பாட்டில் ெகாண்டு வந்ததிலும் ஒன்றிய அரசின் ஒப்புதல் பரிபூரணமாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் அதானி குழுமத்தின் வெண்கொற்ற குடையின் கீழ் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவையும் வந்து சேர்ந்தன. உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்றுக் காலத்தில் எல்லா நிறுவனங்களும் கடும் சரிவைக் கண்டு குட்டிக்கரணம் அடித்தன. ஆனால் அதானி குழுமம் மட்டும் ரூ.11 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உலகின் 3வது பெரிய பணக்காரர் பட்டியலுக்கு முன்னேறியது. அதானி குழுமத்தின் வளர்ச்சி எப்படி பிரமிக்கதக்கதாக இருந்ததோ, இப்போது வீழ்ச்சியும் அந்தளவுக்கு அதலபாதாளத்தை நோக்கியதாக உள்ளது.
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டை வைத்த ஒரே நாளில், அதானி குழுமத்தின் பங்கு பரிவர்த்தனை நிறுவனங்களின் பங்குகள் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பலத்த சரிவைச் சந்தித்தது. தற்போது அக்குழுமம் ரூ.2.40 லட்சம் ேகாடி சொத்துகளை இழந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் அதானியின் சொத்து மதிப்பு வீழ்ச்சி அடையும் வாய்ப்புகள் இருப்பதாகவே பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அதானி குழுமத்தின் வீழ்ச்சியை ஏதோ ஒரு தனிப்பட்ட மனிதரின் வீழ்ச்சி என கணிப்பதும் கடினம். ஏனெனில் கஷ்டப்பட்டு சம்பாதித்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் பணமும் அதில் முடங்கி கிடக்கிறது. அதானியின் குழும பங்குகளில் முதலீடு செய்திருந்த எல்ஐசியின் பங்கு மதிப்பு ரூ.77 ஆயிரம் கோடியில் இருந்து. ரூ.53 ஆயிரம் கோடியாக சரிவை சந்தித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் சந்தை மூலதனமும் ஆட்டம் கண்டுள்ளது. உலக வர்த்தகத்தின் வாய்க்கு அதானி குழுமம் இன்று அவலாக மாறிய நிலையில், ஒன்றிய பாஜ அரசு மவுனம் சாதிப்பதுதான் கொடுமை." என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!