Politics
“தமிழ்நாட்டில் எதையும் திணிக்க முடியாது..” - ஆளுநருக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நெத்தியடி பதில் !
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் பேசுகையில், "தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைப்பதே சரியானது" என்றார். இவரின் இந்த பேச்சுக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. அதோடு இணையவாசிகள், தமிழ் ஆர்வலர்களும் ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நடப்பாண்டின் (2023) முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு கடந்த 9-ம் தேதி தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிக்கொண்டிருக்கும்போதே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை காட்டினர். மேலும் அவர்கள் “எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” என்றும், “தமிழ்நாடு வாழ்க..” என்றும் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து முழக்கம் எழுப்பியபோதும், ஆளுநர் தனது உரையை பேசிக்கொண்டே இருந்தார்.
இருப்பினும் தொடர்ந்து முழக்கத்தை எழுப்பிய அக்கட்சியினர், பின்னர் வெளிநடப்பு செய்ய எண்ணினர். அதன்படி அதிமுகவை தவிர காங்கிரஸ், மதிமுக, விசிக, த.வா.க., உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் தொடர்ந்து ஆளுநர் பேசி வந்தார். அப்போது அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பாக தயாரித்து கொடுக்கப்பட்ட உரையில் இருந்து "தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்" - ஆகிய 5 பெயர்களை ஆளுநர் தனது உரையில் இருந்து நீக்கி பேசினார்.
மேலும் சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஒப்புதல், திராவிட மாடல் - ஆகிய 8 வார்த்தைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்து வாசித்தார்.
ஆளுநரின் இந்த முகசுழிக்கும்படியான நடவடிக்கையை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே அவை மரியாதை இல்லாமல் ஒரு எதிர்க்கட்சி போல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதனால் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதோடு தேசிய கீதம் பாடாமலும் வெளியே ஆளுநர் சென்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் வலுத்தது.
இந்த நிலையில் ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இதுகுறித்து தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, "குடியரசுத் தலைவரை நாங்கள் சந்தித்து தமிழ்நாடு சட்ட்டப்பேரவையில் கடந்த 9-ஆம் தேதி, அவை மரபுகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது பற்றி எடுத்துரைத்தோம்" என்றார்.
தொடர்ந்து பேசுகையில், "தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது அதிகார வரம்பை மீறியும், அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் ஆளுநர் கால தாமதம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், அரசுடன் இணைந்து செயல்பட ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சட்டசபையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் மிகவும் வருந்தத்தக்கது. அவருடைய நடவடிக்கைகளை குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறினோம்.
ஆளுநரின் செயல் அனைத்து மக்களையும் அவமதிக்கும் செயல். அதுமட்டுமல்லாமல் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் எழுந்து சென்றது ஒட்டுமொத்த தேச மக்களையும் இழிவுபடுத்தும் செயல். இதைத் தான் நாங்கள் குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறினோம்.
இது தொடர்பாக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் அன்றைய சம்பவங்கள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அதை வாசித்துவிட்டு குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார். அவர் என்ன முடிவெடுப்பார் என்பதை நாம் கணிக்க முடியாது. ஆளுநரை நியமிப்பதே உள்துறையும், குடியரசுத் தலைவரும்தான். அதனால் எப்படி நியாயம் கிடைக்கும் என்று நீங்கள் எழுப்பும் ஊகங்கள் அடிப்படையிலான கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது.
அரசியலில் சில நெளிவு சுழிவுகள் உள்ளன. அதன்படி கவனமாகத் தான் எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும். ஆகையால், குடியரசுத் தலைவரின் முடிவு என்னவாக இருக்கும் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் ஆளுநர் உரையில் இருந்த சில பத்திகளை அவர் தவிர்த்தது, தேசிய கீதத்தை புறக்கணித்தது பற்றி பேசிவந்துள்ளோம்.
தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து இவ்வாறு நடக்கிறார் என்றால், அவருக்கு தமிழ்நாட்டில் சனாதன கொள்கையை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு திராவிட நாடு. பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உருவாக்கிய தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்திற்கு மாறான கொள்கையை திணிக்க முடியாது. அதைத் திணிப்பதே ஆளுநரின் நோக்கம். நீங்களும் கேள்விகளைக் கேட்கும்போது தமிழ்நாடு என்றே குறிப்பிடுங்கள்.
சேது சமுத்திர திட்டம் குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல் வாரத்திலேயே திமுக சார்பில் கேள்விகளை எழுப்புவோம்" என்று பேசினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!