Politics

70 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் முதல்முறை.. பாதியிலேயே வெளிநடப்பு செய்த ஆளுநர்.. குவியும் கண்டனம் !

அண்மையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் பேசுகையில், "தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைப்பதே சரியானது" என்றார். இவரின் இந்த பேச்சுக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. அதோடு இணையவாசிகள், தமிழ் ஆர்வலர்களும் ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து இணையத்திலும் இந்திய அளவில் #தமிழ்நாடு என்று தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வந்தனர். ஆளுநருக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடே இருக்கும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது செயல்களால் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நடப்பாண்டின் (2023) முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆர்.என்.ரவி தமிழில் பேசத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறினார்.

தொடர்ந்து அவர் தனது உரையை தொடங்கும்போதே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை காட்டினர். மேலும் அவர்கள் “எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” என்றும், “தமிழ்நாடு வாழ்க..” என்றும் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து முழக்கம் எழுப்பியபோதும், ஆளுநர் தனது உரையை பேசிக்கொண்டே இருந்தார்.

இருப்பினும் தொடர்ந்து முழக்கத்தை எழுப்பிய நிலையில், காங்கிரஸ், மதிமுக, விசிக, த.வா.க., உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.அதனைத் தொடர்ந்து ஆளுநர் பேசி வந்தார். அப்போது அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பாக தயாரித்து கொடுக்கப்பட்ட உரையில் இருந்து "தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர்,பெருந்தலைவர் காமராசர்,பேரறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர்" ஆகிய 5 பெயர்களை தவிர்த்தார்.

மேலும், தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இருந்த சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம்,பல்லூயிர் ஒப்புதல், திராவிட மாடல், ஆகிய வார்த்தைகளையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "தமிழ்நாடு அரசு தயாரித்துக்கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்காதது வருந்தத்தக்கது. அரசால் அச்சடிக்கப்பட்டு பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதலமைச்சர் இதுபோன்று கூறியதும் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.

பொதுவாக எதிர்க்கட்சிகளே இது போன்று கொள்கை சார்ந்து வெளிநடப்பு செய்யும் நிலையில், சுதந்திரம் அடைந்து 70 வருட சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் ஒருவர் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேசிய கீதத்தையும் ஆளுநர் புறக்கணித்துள்ளது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read: "சட்டமன்ற மரபுகளை மீறிய செயல்".. ஆளுநர் ரவிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!