Politics
ஏழைகளுக்கான உணவு ரத்து : “ரூ.1 லட்சம் கோடி சேமித்து ஆதாயம் தேடிய மோடி..” - கே.எஸ்.அழகிரி விமர்சனம் !
ஏழைகளுக்கான உணவை ரத்து செய்து, ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் ஞாயம்? என மோடிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி, பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக 10 கிலோ உணவு தானியங்களைப் பெற 81 கோடி இந்தியர்கள் தகுதி பெற்றிருந்தனர்.
ஆனால், தற்போது அவர்கள் 5 கிலோ உணவு தானியங்களை மட்டுமே பெற முடியும். வழக்கம்போல் மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்காமலும் இந்தத் திட்டத்தை ரத்து செய்து தன்னிச்சையான முடிவை பிரதமர் எடுத்துள்ளார். இத்தகைய முடிவின் மூலம் ரூ.1 லட்சம் கோடி சேமித்து மோடி அரசுதான் உண்மையான பயனாளராக மாறியிருக்கிறதே தவிர, குடும்ப அட்டை தாரர்கள் அல்ல. ஏழை மக்களுக்குத் தான் கூடுதல் செலவு ஏற்படப் போகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்ததை விட, ஒவ்வொரு அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இன்றைக்குப் பெருமளவு உயர்ந்துள்ளது. பெரும்பாலான இந்தியர்களின் வருவாய் அதிகரிக்கவில்லை. ஆனால் வேலையின்மை விகிதம் இதுவரையில்லாத அளவுக்குச் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
ஹங்கர் வாச் அமைப்பின் கணக்கெடுப்பின்படி, 80 சதவிகித மக்கள் உணவுக்கு உத்தரவாதம் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. 2022 உலகளாவிய பட்டினி குறித்த உள்ளடக்கத்தின் சர்வேயின்படி, பட்டினி கிடக்கும் மக்களைக் கொண்ட 121 நாடுகளில் இந்தியா 107 வது இடத்தில் இருப்பதை எண்ணி வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருவர் கூட பட்டினியோடு இருக்கக்கூடாது என்பதற்காக, உணவு உரிமைச் சட்டத்தை கடந்த 2013 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. தவறான பொருளாதார நிர்வாகத்தால் பின்னடைவைச் சந்தித்துள்ள இன்றைய நிலையில், இந்த திட்டத்தை மோடி அரசு நிறுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உணவு தானியங்களை இலவசமாக வழங்குவது இந்திய மக்களுக்கு அளிக்கும் பரிசு அல்ல. அது அவர்களது உரிமை என்பதை மோடி அரசுக்கு நினைவூட்டுகிறேன்.
2021 ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பதில் ஏற்பட்ட அளவுக்கு மீறிய தாமதம் காரணமாக, 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் குடும்ப அட்டை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனே குடும்ப அட்டை வழங்க வேண்டும்.
பசியோடு போராடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2021ம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவைச் செயல்படுத்த மோடி அரசு தவறிவிட்டது. இந்த உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
வறுமையை ஒழிப்பதற்காக சோனியா காந்தியின் எண்ணத்தில் உதித்த மக்களுக்கு ஆதரவான மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் வரை, குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது மோடி எதிர்த்தார். ஆனால், பிரதமரானதும் அந்தத் திட்டங்களால் ஆதாயம் தேடிக்கொண்டே, மறுபுறம் ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம் ?" என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!