Politics
பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்த வாராக்கடன்.. உண்மையை ஒப்புக்கொண்ட மோடி அரசின் லட்சணம் இதுதான்!
நரேந்திர மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் வாராக்கடனும் அதிகரித்துள்ளது. வாராக்கடன் தள்ளுபடியும் அதிகரித்துள்ளது. அந்த லட்சணத்தில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று ‘தீக்கதிரி நாளேடு (30.12.2022) தலையங்கம் எழுதியுள்ளது. அது வருமாறு:-
ஏழை, எளிய மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது குதிரைக்கொம்பாக மாறியுள்ளது. நடுத்தர மக்கள் வாங்கியுள்ள வீடு மற்றும் வாகனங்களுக்கான வங்கிகளின் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லையென்றால் அபராதம், ஏ.டி.எம்மில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் என பல வகைகளிலும் பொதுமக்களின் பணம் சூறையாடப்படுகிறது.
மறுபுறத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பெரும் தொகையை கடனாக பெற்றுவிட்டு ஏப்பம் விடுவது அதிகரிக்கிறது. பல கார்ப்பரேட் முதலாளிகள் திட்டமிட்டு மோசடி செய்து கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விடுகின்றனர்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி என வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய யாரும் இதுவரை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்படவில்லை. அவர்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்துக் கொண்டு வெளிநாடுகளில் சொகுசாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடியின் தொடர்ச்சியாக வீடியோ கான் நிறுவனர் வேணுகோபால் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிலிருந்து ரூ.3,250 கோடி கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக வீடியோகான் நிறுவனங்களின் உரிமையாளர் வேணுகோபால், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் செயலதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களும் விரைவில் பிணையில் விடுதலையாகி விடுவார்கள். வழக்கு பல ஆண்டு காலம் நடக்கும். பிறகு ஒன்றுமில்லாமல் போய்விடும். வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததற்கு ஒன்றிய அரசு சூட்டியுள்ள நாகரிகமான பெயர் வராக் கடன். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ விபரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.
வங்கிகளில் கடன் வாங்கி 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மோசடி செய்துள்ள தொகை ரூ.92 ஆயிரத்து 570 கோடி. கீதாஞ்சலி ஜெம்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை மட்டும் ரூ.7,848 கோடி.
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வராக் கடன் தொகை அதிகரித்து வருகிறது. அதை தள்ளுபடி செய்வதும் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் ரூ.11.18 லட்சம் கோடி வராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்த கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. வசூலிப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் விசித்திரமான விளக்கம் அளிக்கிறார்.
இந்த கூட்டுகளவாணி முதலாளித்துவத்தால் சூறையாடப்படுவது எளிய மக்களின் பணம்தான். பா.ஜ.க இத்தகைய மோசடியாளர்களிடமிருந்து முன்கூட்டியே நன்கொடை பெற்றுவிடுவதும், சாதாரண நடைமுறையாகிவிட்டது. இதுதான் மோடி அரசின் லட்சணம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!