Politics
“தயவு செய்து குடிகாரனுக்கு பெண்களை கட்டிக் கொடுக்காதீங்க..” : குமுறும் ஒன்றிய அமைச்சர் - பின்னணி என்ன?
உத்தர பிரதேச மாநிலம் மாநிலத்தில் உள்ள லம்புவா சட்டமன்ற தொகுதியில் போதை குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கெளஷல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போதை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய ஒன்றிய அமைச்சர், குடிப்பழக்கம் உள்ள நபர்களுக்கு தயவு செய்து உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்று கண்ணீர் மல்க கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "சுதந்திரப் போராட்டத்தின் 90 ஆண்டுகளில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் 6.32 லட்சம் பேர் உயிர் தியாகம் செய்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் போதைக்கு அடிமையாகி உயிரிழக்கிறார்கள்.
சுமார் 80% புற்றுநோய் இறப்புகள் புகையிலை, சிகரெட் மற்றும் பீடிக்கு அடிமையாவதால் நிகழ்வதாக ஒரு அறிக்கை கூறுகிறது. மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்ற போதை ஒழிப்பு பிரசாரத்தை அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் காலை இறைவணக்கத்தின்போது இது தொடர்பான ஆலோசனைகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
பீர், ஒயின், விஸ்கி, ரம், ஓட்கா, ஜின் மற்றும் பிராந்தி மற்றும் அராக் மற்றும் கள் போன்ற பிராந்திய பானங்கள் என பலவிதமான மதுபானங்களுக்கு ஒருவர் அடிமையாகும்போது, அது பிரச்னைக்குரிய மற்றும் எதிர்மறையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனது மகன் அண்மையில் கிட்னி செயலிழந்து உயிரிழந்தார். அவர் அதீத குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரை நாங்கள் அனைவரும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மூலம் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று நாங்கள் எண்ணினோம்.
எனவே அவருக்கு மறுவாழ்வு மையத்தில் இருந்து திரும்பிய 6 மாதங்களிலே திருமணம் செய்து வைத்தோம். இருப்பினும் எனது மகன் குடிப்பழக்கத்தை விடவில்லை. தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்தார். இதனால் குடும்பத்தினும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. அவர் கடந்த 2020-ம் ஆண்டு கிட்னி மாற்றும் நுரையீரல் செயலிழந்து இறந்துவிட்டார்.
என் மகன் இறக்கும்போது, அவரது மகனுக்கு வெறும் 2 வயதுதான். தற்போது எனது மருமகள் கைம்பெண்ணாக இருக்கிறார். நான் எம்.பியாகவும், எனது மனைவி எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், எங்களது மகனை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. பொதுமக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்.
எனவே தயவு செய்து நீங்கள் உங்கள் வீட்டு பெண்களை, அது மகளாக இருந்தாலும் சரி, சகோதரியாக இருந்தாலும் சரி குடி பழக்கத்திற்கு அடிமையானவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம்" என கண்ணீர் மல்க பேசினார். இவரது இந்த பேச்சு தற்போது பொதுமக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!