Politics
“மாநில அரசுகள் நல்லது செய்து விடக் கூடாது என்றே பாஜக ஆளுநர்களை நியமிக்கிறது..” - கனிமொழி MP விமர்சனம் !
திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன், நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டந்தோறும் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் நேற்று, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் விவகாரத்தில் பல முறை அமைச்சர் விளக்கம் அளித்தும் ஆளுநருக்கு அது புரியவில்லை என கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பேராசிரியர் போன்ற தலைவரை சந்திப்பது என்பது அசாராதன செயல் என்றால் அது மிகையாகது. நாடாளுமன்றத்தில் ஒரு அமைச்சர் கல்வி, பள்ளிக்கூடங்கள் பற்றி பேசும் போது, பேராசிரியர் கோபத்தோடு எழுந்து 'இதை பற்றி பேசக்கூடிய தகுதி அமைச்சருக்கு கிடையாது; அது மாநில பட்டியலில் உள்ளது' என்று கர்ஜனை செய்தார்.
ஆளுநர் பதவி என்பது, மாநிலத்தில் உள்ளவர்களை நொருக்குவதற்காக கட்சி சார்புடைய ஒருவரை கொண்டு வந்து உள்ளனர். இங்குள்ள ஆளுநரிடம் நாம் கேட்பது எல்லாம் ஒன்று தான் 'ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும், அதனால் பல உயிர்கள் பறிபோய் உள்ளது'. இதனை கருத்தில் கொண்டு தான் அதை தடை செய்ய வேண்டும் என்று பல முறை நமது அரசு முயன்று வருகிறது. இது குறித்து சட்டத்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்தும் ஆளுநருக்கு புரியவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதற்காக சட்டமசோதா தாக்கல் செய்தும், அதற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் எதற்கு என்று பலமுறை கேள்வி எழுப்பி விட்டோம். மாநில அரசுகள் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் ஆளுநர்களை நியமித்து உள்ளனர்" என்று காட்டமாக பேசினார்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ‘ஆன்லைன் சூதாட்டம்‘ மூலம் அதிக தற்கொலைகள் நடந்து வருகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்பதாகக் கூறி, அ.தி.மு.க. அரசு அவசரக் கோலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றியது. ஆனால், உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் சுட்டி அச்சட்டத்தை செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்து விட்டது.
இந்த நிலையில், தி.மு.க. தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மீண்டும் வலுவான முறையில் இயற்றிட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு அவர்களைக் கொண்டு ஓர் ஆய்வுக் குழுவை நியமித்து, அவரது கருத்துரை - பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, அவசரச் சட்டம் (ordinance) இயற்றப்பட்டு, பிறகு, அடுத்துக் கூடிய தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் தடைக்கான தனி மசோதாவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு , கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.
ஆளுநர் விளக்கம் கேட்டதையடுத்து, தமிழக அரசு உரிய விளக்கத்தை அளித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தக்க காரணம் இன்றி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் அவசர சட்டமும் காலாவதி ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?