Politics
நாடாளுமன்ற தேர்தல் முதல் சட்டமன்ற தேர்தல் வரை.. வெற்றிக்கு வித்திட்ட உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம்!
2011ஆம் ஆண்டின் இறுதியில் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் 2012ஆம் ஆண்டு கதாநாயகனாக உருவெடுத்தார்.அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலின் மாறினார். சினிமாவைத் தவிர அரசியலிலும் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.
கட்சியின் தொண்டர்களிடையேயும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகிய நிலையில், அவர் திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் அவர் செய்த பிரச்சாரம் தி.மு.க.வின் வெற்றிக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.
அதன்பின்னர் சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்த அவர் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார். மேலும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து அவருக்கு அங்கீகாரம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என பொதுமக்களும், தி.மு.க தொண்டர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர். இந்த நிலையில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, நாளை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணங்களை இங்கே பார்ப்போம்:-
ஊராட்சி சபை:
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகத் தலைவர் அவர்கள் முன்னெடுத்த ஊராட்சி சபைக் கூட்டங்களைப் பல மாவட்டங்களில் திறம்பட நடத்தினார். தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சுற்றி தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
மக்கள்மொழியில் அவர்களுடன் கலந்துரையாடும் வகையிலான இயல்பான பேச்சு, வாக்காளர்களிடம் மிகப்பெரிய அளவில் மனமாறுதலை ஏற்படுத்தியது என்றால், அது மிகையல்ல. அந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளில் வெல்ல இவரின் பிரசாரத்துக்குக் குறிப்பிடத்தக்கப் பங்குண்டு.
இளைஞர் அணி செயலாளர்:
2019-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி கழக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றபோது கழகம் அதிகாரத்தில் இல்லாதபோதும், இளைஞர் அணியினரைக் கொண்டு மக்கள் பணிகளைச் செய்ய முடிவெடுத்தார். மாநிலம் முழுவதும் தூர்ந்து கிடந்த நீர்நிலைகளைத் தூர்வாரவேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை நூற்றுக்கணக்கான ஏரி குளங்கள் கழக இளைஞர் அணியினால் தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள்:
நீட் தேர்வுக்கு எதிராக, கழக மாணவர் அணியுடன் இணைந்து தொடர் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார். நீட் தேர்வால் தன் இன்னுயிரை இழந்த தங்கை அனிதாவின் சொந்த ஊரில் அவர் நினைவாக அமைந்துள்ள நூலகத்திற்குச் சென்று தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகங்களையும் நூலக மேம்பாட்டுக்கான வளர்ச்சி நிதியையும் வழங்கினார். நீட்டால் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லியும், ஏ.கே. ராஜன் ஆணையத்தில் நீட்டிற்கு எதிரான தன் நிலைப்பாட்டையும் அதனைப் பதிவு செய்வதும் என நீட்டிற்கு எதிராக இன்றுவரை தொடர்ந்து போராடி வருகிறார்.
ஊரடங்கு கால மக்கள் பணி:
கொரோனா காலத்தில் ஊரடங்கை மட்டும் அறிவித்துவிட்டுச் செயல்படத் திறனின்றி நின்றன ஒன்றிய, மாநில அரசுகள். பேரிடரில் வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு, உதவிக்கரம் நீட்ட இளைஞர் அணி சார்பாக அனைத்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களின் அலைபேசி எண்ணையும் பொதுவெளியில் வெளியிட்டு, ‘உதவித் தேவைப்படுவோர் அந்தந்த மாவட்ட அமைப்பாளரைத் தொடர்புகொள்ளலாம்’ என அறிவித்து அந்த நலத்திட்டப் பணிகளை ஒருங்கிணைத்தார். ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்தன, தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் பேரிடரிலும் தங்களை மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர். மருந்துகள், உணவுப் பொருள்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஊரடங்கு நாட்களிலும் உதவிகள் கிடைக்கக் காரணமானார்.
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு:
நாடாளுமன்றத்தின் நாட்டின் ஒற்றுமைக்கே குந்தகம் விளைவிக்கக்கூடிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதற்குத் துணை நின்றது அன்றைய அ.தி.மு.க.. மதச்சார்பின்மைக்கு எதிரான பா.ஜ.க - அ.தி.மு.க.வின் போக்கைக் கண்டித்து, தமிழ்நாட்டில் முதல் நபராக இளைஞர் அணியினருடன் களத்தில் இறங்கிப் போராடிக் கைதானர்.
எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கும் அரசு வேலைக்கும் ஆபத்தை ஏற்படுத்திய அன்றைய அடிமை ஆட்சியாளர்களின் T.N.P.S.C முறைகேட்டைக் கண்டித்து, மாணவர் அணியுடன் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்று தந்தார்.
அண்ணா பல்கலை பிரிப்புக்கு எதிர்ப்பு:
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் அதை இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்ற ஒன்றிய அரசின் முடிவைச் செயல்படுத்தத் துணிந்தார் அன்றைய துணை வேந்தர் சூரப்பா. அவரின் முடிவை அன்றைய அடிமை அ.தி.மு.க. அரசும் ஆமோதித்தது. அம்முடிவைத் திரும்பப்பெறக் கோரி மாணவர் அணியுடன் இணைந்து தமிழகம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக்காட்டினார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் எதிரிலேயே நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் திரண்ட இளைஞர்-மாணவர்களைக் கண்டு அன்றைய மக்கள் விரோத பா.ஜ.க.-அ.தி.மு.க. அரசு அம்முடிவைத் திரும்பப்பெற்றது.
இந்தித் திணிப்பு எதிர்ப்பு:
அதேபோல் இந்தித் திணிப்பு, ஒரே தேர்வு என மொழி, கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாசிச போக்கைக் கண்டித்து, இளைஞர் அணி- மாணவர் அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்.
25 லட்சம் உறுப்பினர்கள் 3.5 லட்சம் நிர்வாகிகள்:
சட்டமன்றத் தொகுதிக்குச் சராசரியாக 10 ஆயிரம் பேர் என மொத்தம் 25 லட்சம் புதிய உறுப்பினர்களைக் கழக இளைஞர் அணியில் சேர்க்கும் பணியை ஒருங்கிணைத்தார். அவர்களில் திறம்பட பணியாற்றிய 3.5 லட்சம் இளைஞர்களை ஒன்றிய கிளைகளிலும், பகுதி-நகர-பேரூர் வார்டுகளிலும் இளைஞர் அணி நிர்வாகிகளாக நியமித்து, கழகத்துக்குப் புத்துயிர் ஊட்டினார். 2021 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இப்பணி நடந்ததால், இளைஞர்கள் தேர்தல் களத்தில் எழுச்சியுடன் பணியாற்றக் காரணமாக அமைந்தது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!