Politics

தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

கடந்த 2011ஆம் ஆண்டின் இறுதியில் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் 2012ஆம் ஆண்டு கதாநாயகனாக உருவெடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலின் மாறினார். சினிமாவைத் தவிர அரசியலிலும் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.

கட்சியின் தொண்டர்களிடையேயும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகிய நிலையில், அவர் திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் அவர் செய்த பிரச்சாரம் திமுகவின் வெற்றிக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.

அதன்பின்னர் சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்த அவர் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார். மேலும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து அவருக்கு அங்கீகாரம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என பொதுமக்களும், திமுக தொண்டர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர். இந்த நிலையில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளார். இந்தப் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். பதவியேற்பு விழா சென்னை ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில். டிசம்பர் 14, 2022 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும்" என கூறப்பட்டுள்ளது.

Also Read: "ஏமாற்றிதான் தேர்வில் பாஸ் ஆனேன்,அதில் நான் Ph.D முடித்தவன்" -சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!