Politics

“அண்ணாமலை டம்மி.. ஆளுநர் பதவிக்கு தகுதி இல்லாதவர் RN.ரவி” : மனுஷ்யபுத்திரன் கடும் குற்றச்சாட்டு !

சென்னை வடகிழக்கு மாவட்டம் தி.மு.க சார்பில் திருவொற்றியூர் தேரடி பகுதியில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்பொழுது தமிழக முதலமைச்சர் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறார் என்று பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, "ஆன்லைன் ரம்மியால் இனி ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்.

ஆளுநரை ஏஜென்டாக பயன்படுத்தும் ஒன்றிய அரசுதான் இதற்கு முழு பொறுப்பு. ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் ஆனால் அவர் இதை தொழில் உரிமைகளை ஏன் முடக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

நான்கு பேர் பணம் வைத்து சூதாடினால் காவல்துறை கைது செய்யும் போது, இது சட்டப்படி குற்றமெனில் லட்ச கணக்கில் பணம் வைத்து ஆன்லைனில் சூதாடுவதை தடை விதிக்க மறுப்பதும் ஏன் என கேள்வி எழுப்ப வேண்டும். அவர்களுக்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை ஆளுநர் அளிக்கிறார் என்பது குறித்தும் ஆராய வேண்டும்.

தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசை ஒன்றிய அரசு ஒருபோதும் எதிர்க்கவில்லை. தமிழக மீனவர்களை அவர்கள் இந்திய மீனவர்களாக கருதவில்லை. ஆனால் குஜராத்தில் இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டால் உடனே நடவடிக்கை என்பது நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல்வர் மட்டும்தான் மீனவர்களை விடுவிக்க கோரி தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனால், ஒன்றிய அரசோ, இலங்கை அரசு நல்லுறவு மட்டுமே எதிர்பார்த்து உள்ளது, படகின் விலையும் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து ஒருபோதும் ஒன்றிய அரசு கண்டு கொள்வதில்லை. எதற்கு வெளியுறவுதுறை அமைச்சர் இருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை.

தமிழக அரசின் நடவடிக்கையால் தான் போதைப் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நடக்கையில் நடைபெறும் போதை பொருட்கள் விற்பனையை தமிழக காவல்துறை சிறப்பாக கையாண்டு, கைது செய்யப்பட்டு வருகிறது. இதனைப் பாராட்டாமல் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலையே விமர்சனம் செய்வது சிரிப்பு போலிஸா அல்லது டம்மி போலிஸா?

தமிழகத்தில் பல ஆளுநர்கள் பதவி வகித்துள்ளார்கள். ஆனால் தற்போது உள்ளவர் ஆளுநர் பதவிக்கு எந்தத் தகுதியும் இல்லாதவர் தான் பதவியில் இருக்கிறார். அதிகாரத்தை மீறி அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். நியாயமாக தமிழக ஆளுநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு எதிராக தான் நடந்து வருகிறார் என தெரிவித்தார்

Also Read: “ஆபாச ஆடியோ விவகாரம் : பின்னணியில் அண்ணாமலை - களங்கப்பட்டுக்கிடக்கும் கமலாலயம்”: சிலந்தி சிறப்பு கட்டுரை!