Politics
“ஆரியமாயை புத்தகத்தைக் கண்டு அவ்வளவு அச்சமா?”: இந்துத்வா கும்பலுக்கு 1951லேயே அண்ணா கொடுத்த தரமான பதிலடி!
பேரறிஞர் அண்ணா அவர்கள் “திராவிடநாடு” இதழில் எழுதி “ஆரிய மாயை” புத்தகத்தை 1950இல் தடை செய்யப்பட்டது. ஆறு மாதங்கள் சிறைதண்டனையும், 700 ரூபாய் அபராதத்தையும் சென்னை மாநில அரசு விதித்தது.
பின்னர் சிறையில் இருந்து விடுதலையான பிறகு, 1951ம் ஆண்டு சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் கைது குறித்து பேரறிஞர் அண்ணா பேசிய உரை பின்வருமாறு :-
“நான் ஒரு புத்தகம் எழுதினேன். அதற்காக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன். அந்த புத்தகத்தின் பெயர் “ஆரியமாயை” அது எழுதப்பட்டது 1942 ல். அதற்காக வழக்குத் தொடரப்பட்டது 1950ல். புத்தகம் எழுதி ஒன்பது ஆண்டுகள் ஆனபிறகு ஆறு பதிப்பிலே ஒவ்வொரு பதிப்புக்கும் சுமார் 3,000 வீதம் மொத்தம் 18,000 புத்தகங்கள் வெளிவந்த பிறகு, அதை சுமார் லட்சத்திற்கு மேல் மக்கள் படித்து அந்த லட்சம் மக்களிலும் குறைந்தது 2000 பேர்கள் பக்கத்துக்கு பக்கம் பாராமல் ஒப்புவிக்கும் சக்திபெற்ற பிறகு, அதாவது குதிரை கோவில்பட்டியில் பறிபோகி, அது வேலூருக்கு வந்தான பிறகு கொட்டிலை இழுத்துப் பூட்டுவது போல், நான் எழுதிய புத்தகத்திற்கு தடை போடுகிறார்கள்.
1942ல் எழுதிய புத்தகத்திற்கு 1950ல் குற்றம் காண்கிறார்கள். 9 வருட காலமாக உண்டாக்காத வகுப்பு துவேஷத்தை இப்பொழுது மாத்திரம் அது எப்படி உண்டாக்கும் என்பது தெரியவில்லை. ஆரிய மாயை புத்தகம் எழுதியதற்காக என்னைச் சிறையில் போட்டுவிட்டார்கள் சரி!
அதைப்படித்த எண்ணற்ற வாலிபர்களை என்ன செய்யப் போகிறார்கள்?
அவர்கள் இதயத்திலே குடிகொண்டிருக்குமே “ஆரிய மாயை” கருத்துக்கள் அதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?
ஒவ்வொரு வாலிபராகக் கூப்பிட்டு “உன் உள்ளத்திலே “ஆரிய மாயை” கருத்து இருந்தால் அதை கக்கு “நீ வா உன்னுடைய எண்ணங்களிலே ஆரிய மாயைக் கருத்துக்கள் கலந்திருந்தால் அவைகளை எடுத்து வீசிவிடு என்று சொல்லப்போகிறார்களா?
சிறையில் தள்ளிவிட்டார்கள். புத்தகம் எழுதிய குற்றத்திற்காக அந்தப் புத்தகத்திலே உள்ள கருத்துக்களை மனப்பாடம் செய்துவிட்ட எண்ணற்ற வாலிபர்களை என்ன செய்யப்போகிறார்கள்?
‘ஆரிய மாயை’ அவ்வளவு என்ன ஆபத்தான புத்தகமா? வெள்ளைக்காரர்கள் காலத்தில் இல்லாத வகுப்பு துவேஷத்தை இப்பொழுது புதிதாகப் போதிக்கிறதா?
ஒருவர் எழுதிய புத்தகத்தைக் கண்டு அவ்வளவு அச்சமா?
அதைப்படித்தால் ஆட்சிப்பீடம் ஆடிவிடும் என்றால் ஆட்சிபீடம் அவ்வளவு பலஹீனமானதா?
அதை நாட்டிலே உலவ விட்டால் பூகம்பம் ஏற்பட்டுவிடுமா?
எழுத்தாளன் பேனாவைத் தொட்டால் சர்க்காருடைய கஜானாவின் சாவி காணாமல் போய்விடும் என்ற கிலி இருந்தால் அந்தக் கிலி இருக்கலாமா?
பேனா வீரர்கள் உங்களிடம் கிடையாதா? ‘கல்கி’ ஆசிரியருக்குத் தெரியாதா? ‘விகடன்’ ஆசிரியருக்குத் தெரியாதா?
‘மித்திரன்’ ஆசிரியருக்குத் தெரியதா? ஏன் ‘தினமணி’ ஆசிரியர் தோழர் சிவராமனைக் கூப்பிட்டு ‘எடு பேனாவை இந்தா காகிதம் எழுது ஆரியமகிமையைப்பற்றி என்று கட்டளையிட்டு இதோ “ஆரிய மகிமை” என்று காட்டலாமே, தைரியமிருந்தால்! அதையல்லவா செய்திருக்க வேண்டும்.
‘ஆரிய மாயை’யும் நாட்டிலே உலவட்டும். ‘ஆரிய மகிமை’ யும் நாட்டிலே உலவட்டும். மக்கள் நீதிபதிகள். அவர்கள் மனம் உரைகல். பக்கத்துக்குப் பக்கம் இரண்டையும் மக்கள் படிக்கட்டும். அபத்தம் இருந்தால் எடுத்து வீசி, எறிந்து விடுகிறார்கள்.
தேவை என்றால் எடுத்துக்கொள்கிறார்கள். இதுவல்லவா நேர்மை, நீதி, அறிவு, ஆண்மை உள்ளவர்கள் செய்ய வேண்டியது. அதை விட்டு ‘ஆரியமாயை’ புத்தகத்திற்கு மாத்திரம் தடை போடுவது என்ன நியாயம்? ” என பேசியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!