Politics
குஜராத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த 18 கிராம மக்கள்.. இந்த அதிரடி அறிவிப்பின் காரணம் என்ன ?
இந்தாண்டு குஜராத் மாநில தேர்தலை ஒட்டுமொத்தமாக 18 கிராம மக்கள் புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது குஜராத் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக் காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அங்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் இமாச்சலப்பிரதேச தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போதே குஜராத் தேர்தல் தேதியும் அரிக்கவிக்கப்படும் என்று எண்ணிய நிலையில் அது அறிவிக்கப்படவில்லை.
மாறாக கடந்த 3-ம் தேதி குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பாஜக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
தற்போது தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் தங்களது பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. மேலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் அறிவித்தும் வருகின்றன.
இந்த நிலையில் அஞ்செலி மற்றும் நவ்சாரி என்ற சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குஜராத் தேர்தலைப் புறக்கணித்து, அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட தேர்தல் சம்மந்தபட்ட விஷயங்களை தங்கள் கிராமங்களுக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவர்களுக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டி வருக்கின்றனர். இந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க தங்கள் காரணங்களையும் சுவரொட்டிகள் மூலம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், "கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வரை எங்கள் பகுதியான அஞ்செலியில் இரயில்கள் நின்று செல்லும். ஆனால் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு எந்தவொரு இரயில்களும் நிறுத்தப்படுவதில்லை.
இதனால் இரயிலில் செல்பவர்கள் தனியார் வாகனத்தில் செல்ல நேரிடுகிறது. அதற்காக நாளொன்றுக்கு அவர்கள் குறைந்தது 300 ரூபாய் செலுத்தி செல்ல வேண்டியதுள்ளது. இரயில் நிற்க வேண்டும் என்று நாங்களும் பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால் அந்த மனுக்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதனால் இந்த முறை நாங்கள் தேர்தலில் ஓட்டு போடுவது இல்லை என்று முடிவு செய்திருக்கிறோம். இந்த முடிவை ஒட்டுமொத்த 18 கிராம மக்கள் நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒருமனதாக இந்த ஆண்டு குஜராத் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவெடுத்திருக்கிறோம்" என்றனர்.
மேலும் அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் "இரயில் இல்லை என்றால், ஓட்டில்லை.." என்று எழுதியிருந்தது. இது தற்போது குஜராத் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?