Politics
10% இடஒதுக்கீடு:தமிழ் மக்களுக்காக முதல்வர் எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் -செல்வப்பெருந்தகை
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கு தமழ்நாடு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி மற்றும் ஆதரவு கட்சிகள் உள்ளிட்ட பலரும் முற்றிலுமாக எதிர்த்து வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று (12.11.2022) அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் பொன்முடி, வில்சன், மதிமுக சார்பில் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன், கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன், பாமக சார்பில் பாலு, வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கே நடைபெற்ற கூட்டத்தில் 10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு இதில் பங்கேற்ற அனைத்து கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸும் ஆதரவு தெரிவித்துள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
10% இடஒதுக்கீட்டுக்கு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்றுள்ளது. இது குறித்து இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எங்களது முழு ஆதரவு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசுகையில், "காங்கிரஸ் கட்சியின் சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தேசிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸின் பார்வை வேறு வகையில் இருந்தாலும், தமிழ்நாட்டில் சமூக நீதி கொள்கையை ஆதரிக்கிறோம். தமிழ் மக்களின் நலனுக்காக முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்" என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!